எதுவும் கேரண்டி இல்ல, தேர்தல் செய்தி உண்மை தான் – இந்தியாவுக்காக விளையாடும் கம்பேக் தேதியை அறிவித்த ஜடேஜா

Jadeja-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் உலக அளவில் தற்சமயத்தில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் ரவீந்திர ஜடேஜா கடைசியாக கடந்த 2022 ஆசிய கோப்பையில் விளையாடிய போது காயமடைந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை. அது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற ரவீந்திர ஜடேஜா முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குஜராத் தேர்தலில் தனது மனைவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டது ரசிகர்களையும் பிசிசிஐயையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

jadeja 2

- Advertisement -

அந்த நிலையில் அடுத்ததாக பிப்ரவரி மாதம் நடைபெறும் முக்கியமான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா காயத்தை பொறுத்து சேர்க்கப்படுவார் என்ற நிபந்தனையை தேர்வுக்குழு அறிவித்தது. அதாவது கடந்த 3 மாதங்களாக எந்த விதமான உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாத அவர் முழுமையாகவும் குணமடையாமல் இருப்பதால் தற்சமயத்தில் எந்தளவுக்கு பார்மில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதனால் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமெனில் முதலில் குறைந்தது ரஞ்சிக்கோப்பையில் ஒரு போட்டியிலாவது விளையாடி ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை நிரூபித்து காட்டுங்கள் என்று ரவீந்திர ஜடேஜாவுக்கு பிசிசிஐ உத்தரவிட்டது.

கம்பேக் கொடுப்பேன்:
அதனால் வேறு வழியில்லாத ஜடேஜா ஜனவரி 24ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் துவங்கிய தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடிய பின் வரும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். மேலும் யாருமே உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் போது காயமடைந்து வெளியேற விரும்ப மாட்டார்கள் என்று தெரிவிக்கும் அவர் காயங்கள் வராது என கேரண்டியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

Jadeja-3

இது பற்றி ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் களத்தில் விளையாடுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. இந்த போட்டியில் அணிக்காகவும் எனக்காகவும் நல்ல செயல்பாடுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு களமிறங்கி 100 சதவீதம் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை நிரூபிப்பதே என்னுடைய முதல் வேலையாகும். அதை நான் செய்து விட்டால் அடுத்ததாக பேட்டிங், பவுலிங் போன்ற அனைத்து வகையான என்னுடைய நுணுக்கங்களில் சில வேலைகளை செய்ய வேண்டும். எனவே தற்போதைக்கு ஃபிட்னஸ் மட்டுமே என்னுடைய முதல் முன்னுரிமையாகும்”

- Advertisement -

“காயமடைந்த பின் நான் 20 நாட்களாக என்சிஏவில் முகாமிட்டு பேட்டிங், பவுலிங் போன்ற பயிற்சிகளை செய்தேன். இருப்பினும் களத்திற்கு அதற்கும் வித்தியாசம் உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக நான் ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்ற நிபந்தனை வந்தது. அதனால் தான் நான் இங்கே உள்ளேன். காயங்கள் என்பது மோசமான உணர்வை கொடுக்கும் என்பதுடன் யாருமே உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் போது காயமடைய விரும்ப மாட்டார்கள். நீங்கள் அதை மனதில் வைத்து அதற்காக தயாராக இருக்க வேண்டும்”

Rivaba Jadeja

“இருப்பினும் அதை தடுக்க நீங்கள் எதுவும் செய்ய முடியாது. கிரிக்கெட்டில் யாருமே காயமடைய மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. அந்த வகையில் தசைநார் காயத்தை சந்தித்த நான் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். ஏற்கனவே சொன்னது போல பயிற்சி களத்திற்கும் போட்டி களத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதில் சிறந்து விளங்க கொஞ்சம் கொஞ்சமாக என்னை தயார்ப்படுத்தி வருகிறேன். விரைவில் எனது கால்கள் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இடைப்பட்ட காலத்தில் நான் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறி இதர வேலைகளில் (தேர்தல்) ஈடுபட்டேன்”

இதையும் படிங்க: புதுவருஷம் பொறந்து 10 நாள்ல இப்படி ஒரு சாதனையா? கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த – சுப்மன் கில்

“அங்கே எனது கவனத்தைச் செலுத்தியதும் எனக்கு நிறைய உதவியது. அந்த சமயங்களில் கிரிக்கெட்டை பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த அந்த சமயத்தில் தேர்தலில் நான் ஈடுபட்டிருந்தேன். அது எனக்கு நன்றாகவே உதவியது. அந்த சமயங்களில் இந்தியா விளையாடிய பெரும்பாலான போட்டிகளை பார்க்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட சில போட்டிகளை பார்த்தேன்” என்று கூறினார்.

Advertisement