இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். கடந்த டிசம்பர் மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார். அதற்கு முன்பாக புஜாரா, ரஹானே ஆகியோர் கழற்றி விடப்பட்டனர். தற்போது விராட், ரோஹித் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளது இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்தியா தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.
1151 நாட்கள்:
அது போக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 1151 நாட்களாக ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா நம்பர் ஒன் இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்க் ஒன்பதாம் தேதி வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
அப்போதிலிருந்து 23 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 1175 ரன்களை 36.71 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் 5 அரை சதங்கள் அடங்கும். அது போக பந்து வீச்சில் 91 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் 6 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அப்படி பேட்டிங், பௌலிங் ஆகிய 2 துறைகளிலும் இந்தியாவுக்காக அசத்தி வரும் ஜடேஜா 1151 நாட்களாக நம்பர் ஒன் மணிமகுடத்தை தன் வசம் வைத்துள்ளார்.
ஜடேஜா சாதனை:
இதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக நாட்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து ஜேக் காலிஸ், கபில் தேவ் போன்ற வேறு எந்த ஆல் ரவுண்டர்களும் இவ்வளவு நாட்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்ததில்லை. அவர்களை மிஞ்சியுள்ள ஜடேஜா தற்போது 400 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் ஜொலித்து வருகிறார்.
இதையும் படிங்க: 50 வயது வரை ஆட வேண்டிய ரோஹித், கோலியை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. 2013 மாதிரி விழும்.. யோக்ராஜ் பேட்டி
2வது இடத்தில் வங்கதேசத்தின் மெஹதி ஹசன் இருக்கிறார். டாப் 10 டெஸ்ட் பேட்டிங் வரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மட்டுமே 4வது இடத்தில் இருக்கிறார். டாப் 10 பவுலிங் தரவரிசையில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பௌலராக ஜொலிக்கிறார். அவரைத் தவிர்த்து ரவீந்திர ஜடேஜா 10வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



