- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சென்னை மாப்பிள்ளை வேடத்தில் பதிவு.. ரோஹித், கோலி போல ஜடேஜா ஓய்வு பெறுகிறாரா? விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமான அவர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 12 வருடங்கள் கழித்து இந்தியா வெல்ல அவர்கள் முக்கிய பங்காற்றினர்.

அதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் கொஞ்சம் காலம் விளையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருக்கும் அவர்களை அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஜடேஜா பதிவு:

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு அவரும் ஓய்வு பெறப் போகிறாரா? என்ற அச்சத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அந்தப் பதிவில் இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை அணிந்துள்ள ஜடேஜா தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரியமான பட்டுத் துண்டை தோளில் போட்டுள்ளார். அத்துடன் நெற்றியில் வெள்ளைப் பொட்டு வைத்துள்ள அவர் மீசையை முறுக்கியவாறு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவின் கீழ் “அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். உண்மையாக உங்களுடைய வாழ்த்துக்களை பாராட்டுகிறேன்” என்ற தலைப்பையும் ஜடேஜா எழுதியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒன்றாக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் தாமும் ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார்.

- Advertisement -

பின்னணி விவரம்:

அதே போல தற்போது விராட் கோலி, ரோஹித் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுகிறாரா? என்று ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் நேற்று முன்தினம் புதிய ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டது. அதில் தொடர்ந்து 1151 நாட்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல் ரவுண்டர் இடத்தைப் பிடித்து ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தான்.. உறுதிசெய்த பி.சி.சி.ஐ – முக்கிய காரணங்கள் இதோ

அதன் வாயிலாக ஐசிசி நம்பர் ஒன் டெஸ்ட் ஆல் ரவுண்டர் இடத்தில் அதிக நாட்கள் இருந்த வீரர் என்ற உலக சாதனையை ஜடேஜா படைத்தார். அதற்கு நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே ரவீந்திர ஜடேஜா இப்படி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்திய அணியில் கோலி, ரஹானே, ரோஹித், புஜாரா, அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் ஜடேஜா மட்டுமே பழைய வீரராக இன்னும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -