இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கேப்டன் பதவிக்கான போட்டியில் சில வீரர்களது பெயர் இடம்பெற்று இருந்தாலும் 25 வயதான நட்சத்திர வீரர் சுப்மன் கில் தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் : பி.சி.சி.ஐ முடிவு
மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வரும் அவர் இதுவரை 11 ஆட்டங்களில் தலைமை தாங்கி 8 வெற்றிகளை பெற்றுள்ளார்.
தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இவ்வேளையில் அவருக்கு புதிய டெஸ்ட் கேப்டன் பதவி கிடைக்க இருக்கிறது. இந்தியாவின் நீண்ட ஆண்டுகால கேப்டன்சி தேடலுக்கு சுப்மன் கில் தான் சரியான தீர்வாக இருப்பார் என்று பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி வெளியான தகவலின் படி சுப்மன் கில்லை ஏன் பிசிசிஐ புதிய கேப்டனாக நியமிக்க விரும்புகிறது என்பது குறித்த காரணங்களை இங்கு காணலாம். தற்போது 25 வயதான சுப்மன் கில் இன்னும் பல ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதனால் அவரை அடுத்த கேப்டனாக நியமிக்க நிர்வாகம் விரும்புகிறது.
அதோடு தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வரும் அவரிடம் கேப்டன்சிக்கான திறமைகள் இருப்பதாகவும் கண்டிப்பாக கம்பீரின் பயிற்சியின் கீழ் அவர் இன்னும் அந்த பண்புகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வார் என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவரை துணை கேப்டனாக பி.சி.சி.ஐ நியமித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இரண்டே போட்டியுடன் 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய மாயங்க் யாதவ்.. காரணம் என்ன? – மாற்றுவீரர் அறிவிப்பு
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சற்று மந்தமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தாலும் நிச்சயம் கேப்டன் பொறுப்பு அவரிடம் கிடைக்கும்போது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்துவார் என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



