மீசை வெச்ச இந்திரன் மீசையில்லாத சந்திரன் மாதிரி.. ரஜினிகாந்த் ஸ்டைலில் அஷ்வினை பாராட்டிய ஜடேஜா

Ashwin and Jadeja
- Advertisement -

தரம்சாலாவில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார். அதே தொடரில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்ற அவர் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

அந்த வகையில் தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்த அஸ்வின் தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்து தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அவருக்கு 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்ததற்காக நேற்று சென்னையில் தமிழ்நாடு வாரியம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

- Advertisement -

வாழ்த்திய ஜடேஜா:
அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள்.

அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு. “ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும்”

- Advertisement -

“நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்” என்று கலகலப்பாக பேசினார்.

இதையும் படிங்க: 17 வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த அந்த வாய்ப்புக்காக தோனிக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கேன்.. அஸ்வின் உருக்கம்

அதாவது தில்லுமுல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதைப் போல மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த தாம் இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்யாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Advertisement