
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387 ரன்கள் குவித்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அற்புதமாக விளையாடி 69 ரன்கள் அடித்தது. அதைத்தொடர்ந்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் வில் ஆகியோர் நான்காவது நாளில் விக்கெட்டை விடாமல் இந்தியாவை தூக்கி நிறுத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து அசத்தினார்கள்.
அதில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 5வது நாளில் 90 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் சதத்தை அடித்து அசத்திய போது 103 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனால் இந்தியா பின்னடைவை சந்தித்த போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நங்கூரத்தைப் போட்டனர்.
5வது நாள் உணவு இடைவெளிக்குப்பின் இணைந்து நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி இங்கிலாந்துக்கு பெரிய சவாலாக மாறியது. நல்ல பந்துகளுக்கு மரியாதைக் கொடுத்து சுமாரான பந்துகளில் ரன்களை அடித்த அந்த ஜோடியில் முதலாவதாக சுந்தர் அரை சதத்தை அடித்தார். அதே போல ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை அடித்ததால் தேனீர் இடைவெளியில் இந்தியா 322/4 ரன்கள் குவித்துள்ளது.
அதனால் இப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ள இந்தியா 11 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. களத்தில் சுந்தர் 58*, ஜடேஜா 53* ரன்கள் எடுத்துள்ளார்கள். இதையும் சேர்த்து இங்கிலாந்து மண்ணில் நம்பர் 6 அல்லது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக முறை 50+ ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற ஜாம்பவான் சோபர்ஸ் உலக சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சர் கேரி சோபர்ஸ்/ரவீந்திர ஜடேஜா: 9
2. எம்எஸ் தோனி: 8
இதையும் படிங்க: 511 ரன்ஸ்.. கவாஸ்கரின் சாதனை சமன்.. 46 வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் கேஎல் ராகுல் அபார சாதனை
இது போக இங்கிலாந்து மண்ணில் 1000 ரன்கள், 30 விக்கெட்டுகள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் வில்ஃப்ரேட் ரோட்ஸ், வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ் ஆகியோருடைய உலக சாதனையையும் ஜடேஜா சமன் செய்துள்ளார். அத்துடன் ஒரே டெஸ்ட் தொடரில் 6 அல்லது அதற்கு கீழாக களமிறங்கி 5 முறை 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விவிஎஸ் லக்ஷ்மன் (2002 வெஸ்ட் இண்டீஸ் தொடரில்) சாதனையையும் ஜடேஜா சமன் செய்துள்ளார்.