- Advertisement -
ஐ.பி.எல்

எல்லாம் முடிஞ்ச்சி, சென்னையை விட்டு ஜடேஜா வெளியேறுவது உறுதி – ரசிகர்கள் கவலைக்கான காரணம் இதோ

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் முதல் மார்ச் முதல் மே வரை 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக 65 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்ற நிலையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. அதற்கு மோசமான பேட்டிங் சுமாரான பௌலிங் என்பதையும் தாண்டி தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி 40 வயதை நெருங்கியதால் கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது முக்கிய காரணமாக அமைந்தது.

ஏனெனில் என்னதான் அவருக்கு உறுதுணையாக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னை 2020க்குப்பின் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அதைவிட அதுவரை அற்புதமான ஆல்-ரவுண்டராக ஜொலித்த வந்த அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் மொத்தமாக சொதப்பினார்.

சென்னையுடன் மனக்கசப்பு:
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் ஒரு கட்டத்தில் அந்த பொறுப்பே வேண்டாம் என்ற முடிவெடுத்து பாதியிலேயே கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார். அந்த வெளிப்படையான முடிவு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே காயமடைந்த அவர் முழுமையாக விளையாடாமல் கடைசி 4 போட்டிகளுக்கு முன்பாக வெளியேறினார்.

ஆனால் இதற்கு முன் ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்த சுரேஷ் ரெய்னாவும் இதேபோல் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக 2021 சீசனின் இறுதியில் காயமென்ற பெயரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு பின்பு மொத்தமாக கழற்றி விட்டதைப் போலவே ஜடேஜாவையும் சென்னை அணி நிர்வாகம் நடத்துவதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகித்தனர்.

இருப்பினும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் உண்மையாகவே ஜடேஜா காயமடைந்த புகைப்படங்களை சென்னை ரசிகர்கள் பதிலடியாக காட்டினர். அத்துடன் ஜடேஜாவுக்கும் தங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை உண்மையாகவே காயமடைந்த அவர் அடுத்த வருடம் வழக்கம் போல தங்களது அணியில் விளையாடுவார் என்று நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

நீக்கப்படும் பதிவுகள்:
அந்த நிலைமையில் காயத்திலிருந்து குணமடைந்து ரவிந்திர ஜடேஜா சமீபத்திய இங்கிலாந்து தொடரின் வாயிலாக மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்து விளையாட தொடங்கியுள்ளார். இதற்கிடையே சென்னை அணிக்காக 2021 மற்றும் 2022 சீசன்களில் விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா நீக்கியதை கவனித்த ரசிகர்கள் அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனை அதனால் தான் அதை நீக்கினார் என்று ஆதாரத்துடன் புயலை கிளப்பினார்கள். அது சென்னை நிர்வாகத்தின் காதுகளுக்கு செல்ல மீண்டும் தங்களுக்கும் ஜடேஜாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று அந்த அணி நிர்வாகம் தெளிவுபடுத்தியது.

இந்த நிலைமையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை சம்பந்தப்பட்ட பதிவுகளை மொத்தமாக நீக்கி முடித்துள்ள ரவீந்திர ஜடேஜா அடுத்ததாக டுவிட்டர் பக்கத்தில் அந்த வேலையை தொடங்கியுள்ளதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த 2012இல் முதல் முறையாக சென்னை அணிக்காக வாங்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா 2022 வரை 10 வருடங்களாக விளையாடி வருகிறார். அதைப் பாராட்டும் வகையில் இந்த வருடத்தின் சீசன் துவங்கும் போது சென்னை அணி நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் பாராட்டியிருந்தது.

எல்லாம் முடிஞ்ச்சி:
அந்த பதிவுக்கு “இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன்” என்று ஜடேஜா பதிலளித்திருந்தார். அந்த ரிப்ளையை தற்போது அவர் தேடிப்பிடித்து டெலிட் செய்துள்ளார். இதுபோக சென்னை சம்பந்தமான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்க தொடங்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சென்னை அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் மனக்கசப்பும் சண்டையும் இல்லையெனில் ஏன் சம்மந்தமில்லாமல் அவர் அதைத் தேடிப் பிடித்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் நியாயமான கேள்வி எழுப்புகின்றனர். இது நம்பும் படியாகவும் இருப்பதால் தற்போது நிறைய சென்னை ரசிகர்களும் தங்களது அணியில் இனிமேல் ஜடேஜா விளையாடமாட்டார், எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல் சோகமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -
Published by