
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் பிப்ரவரி ஆறாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்தை 47.4 ஓவரில் 248 ரன்களுக்கு இந்தியா சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 249 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் 2, ஜெய்ஸ்வால் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் சுப்மன் கில் 87, ஸ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்து 38.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தார்கள்.
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் மற்றும் சாகிப் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 87 ரன்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல 9 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா 12* ரன்களும் அடித்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார்.
இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 42* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக இந்தியா – இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அதேப் பட்டியலில் ஆண்ட்ரூ பிளின்டாப் 37, ஹர்பஜன் சிங் 36, ஜவஹல் ஸ்ரீநாத்/ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 35 விக்கெட்டுகளுடன் முறையே 3, 4, 5வது இடங்களில் உள்ளார்கள். இது போக இந்த 3 விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜா மொத்தம் 600* விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
இதையும் படிங்க: உழைப்புக்கு பரிசு கிடைச்சுருக்கு.. ரோஹித் பாய் சொன்ன ஐடியா தான் ஹெல்ப் பண்ணுச்சு.. ராணா பேட்டி
மேலும் ஏற்கனவே அவர் பேட்டிங்கில் 6000 ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக கபில் தேவுக்கு பின் அந்த சாதனையை படைக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.