- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : மீண்டும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக நிரூபித்த ஜடேஜா – டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 அபார சாதனைகள்

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 98/5 என சரிந்தாலும் அதன்பின் கொதித்தெழுந்து 412 ரன்கள் குவித்து அசத்தியது. சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் 6-வது விக்கெட்டுக்கு நங்கூரமாகவும் அதிரடியாகவும் 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்கள்.

அதில் 131.53 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட அனைத்து இங்கிலாந்து பவுலர்களையும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு 89 பந்துகளில் சதமடித்து அதிரடியாக பேட்டிங் செய்த பண்ட 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

அசத்தும் இந்தியா:
அவர்களது ஆட்டத்தை விட இப்போட்டியில் கேப்டனாக இந்தியாவை வழிநடத்தும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் களமிறங்கியபோது அவரை அச்சுறுத்தி நினைத்த ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரில் 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என 2 நோ-பால்களிலும் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். மொத்தமாக 35 ரன்களை குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சரித்திர உலக சாதனை படைத்தார்.

அதை தொடர்ந்து 2-வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்துக்கு பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே சவாலை கொடுத்தார். அதனால் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 84/5 என்ற நிலைமையில் இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் இந்தியா சரிந்த போது அற்புதமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பல ஜாம்பவான்களை பாராட்டுகளை அள்ளி வருகிறார்கள்.

- Advertisement -

விமர்சனங்களுக்கு பதிலடி:
அதில் 146 ரன்களை அதிரடியாக குவித்து அதிக பாராட்டுகளை ரிஷப் பண்ட் வாங்கினாலும் அதற்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா தான். ஏனெனில் அவர்தான் எதிர்ப்புறம் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு எதிரணி போட்ட அத்தனை அழுத்தத்தையும் தாங்கிப் பிடித்து தாமும் சீராக ரன்களை குவித்து ரிஷப் பண்ட் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இவர் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் அதிகப்படியான ஆதரவால் ஒரு வழியாக கடந்த 2019 உலகக்கோப்பைக்குப் பின்பாக பேட்டிங்கில் பன்மடங்கு உயர்ந்து கடந்த 3 வருடங்களாக தரமான பேட்ஸ்மேனை போல ரன்களை குவித்து வருகிறார்.

அதேபோல் பந்து வீச்சிலும் வழக்கம் போல அசத்தும் இவர் பீல்டிங்கில் எந்த இடத்தில் நின்றாலும் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு கடினமான கேட்ச்களை அற்புதமாக பிடிக்கும் உலகின் ஃபீல்டாரகவும் ஜொலித்து வருகிறார். அதனாலேயே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக இடம் பிடித்துள்ள இவர் இந்தியாவுக்கு முடிந்த அளவுக்கு பெருமைகளை சேர்த்து வருகிறார்.

- Advertisement -

ஆனாலும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்றவர்கள் இவர் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக் கொண்டே வருகிறார்கள். அதற்காக ஒவ்வொரு முறையும் அபார செயல்பாடுகளால் பதிலடி கொடுத்து வரும் ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக ஆசியாவுக்கு வெளியே சதமடித்து இப்போட்டியின் வாயிலாக மீண்டும் ஒரு பலத்த பதிலடி கொடுத்துள்ளார்.

1. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 7-வது இடத்தில் களமிறங்கி 175* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்காற்றியதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போது இப்போட்டியிலும் 7-வது இடத்தில் களமிறங்கி இந்தியா தடுமாறியபோது சதமடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே வருடத்தில் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் 7-வது இடத்தில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. அதேபோல் கடந்த 2019 முதல் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 1000 ரன்களையும் 50 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரராக சாதித்துள்ள அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : 35 ரன்கள் உலகசாதனை தவிர்த்து – கேப்டன் பும்ரா படைத்த 3 புதிய எதிர்பாரா வரலாற்று சாதனைகள் இதோ

3. இதுபோக கடந்த 2017 ஜூலை மாதத்திற்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னரை விட (45.76) மிகச் சிறந்த பேட்டிங் சராசரியை (46.74) கொண்டுள்ள அவர் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க்கை விட (26.98) சிறந்த பவுலிங் சராசரியைக் (26.31) கொண்டுள்ளார். இது சமீபத்திய காலங்களில் அவர் எந்த அளவுக்கு உலக அளவில் அற்புதமான ஆல்-ரவுண்டராக வளர்ந்துள்ளார் என்பதை காட்டுகிறது.

- Advertisement -
Published by