3வது டெஸ்டில் இந்தியா தோற்க நான் போட்ட யூடியூப் வீடியோ தான் காரணமா? கலாய்த்து திட்டிய ரசிகர்களுக்கு அஷ்வின் பதிலடி

Ashwin Youtube
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா அசத்தியுள்ளது. இருப்பினும் 3வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்று 4வது போட்டியில் இந்தியாவை வெல்ல விடாமல் ட்ரா செய்து இத்தொடரை திருப்திகரமாக முடித்தது. ஆனாலும் இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த தயாராக உள்ளது.

முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளை இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற நிலையில் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வெளியேறியதாலும் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட எதிர்கொள்ள சரியான டெக்னிக் தெரியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறியதாலும் 4 – 0 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச்சில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

அஷ்வின் பதிலடி:
அந்த நிலையில் பொதுவாகவே ஒவ்வொரு போட்டிக்கு பின்பும் அதில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ள அஸ்வின் 2வது போட்டிக்கு பின் “இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி விளையாடுவது” என்ற தலைப்புடன் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்து தான் ஆஸ்திரேலியா வென்றதாக சில ரசிகர்கள் அஸ்வினை கலாய்த்து திட்டினார்கள். இந்நிலையில் சில அடிப்படைகளை மையப்படுத்தி தமிழில் பதிவிட்ட அந்த வீடியோவை ஆஸ்திரேலிய அணியினர் பார்த்து ஒரே இரவில் கற்றுக்கொண்டு இந்தியாவை தோற்கடித்ததாக ரசிகர்கள் சொல்வது வேடிக்கையாக இருப்பதாக அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றிய தற்போது யூடியூப் பக்கத்தில் அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “டெல்லியில் நடைபெற்ற போட்டி பற்றி நான் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தேன். அந்த வீடியோவை என்னுடைய அட்மின் “இந்தியாவின் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது” என்ற தலைப்புடன் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த எனக்கே நான் எப்படி அதை கற்றுக் கொடுக்க முடியும்? என்று தோன்றியது. இருப்பினும் அந்த வீடியோவில் “உங்களுடைய தடுப்பாட்டத்தை நம்பி செயல்பாடுகளை பின்பற்றுங்கள்” என்பது போன்ற சில முக்கிய புள்ளிகளை நான் தெரிவித்திருந்தேன். அவையெல்லாம் கிரிக்கெட்டின் வெறும் அடிப்படையாகும்”

- Advertisement -

“ஆனால் இந்தூரில் நாங்கள் தோற்றதும் “இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்று நீங்கள் வீடியோ போட்டு கற்றுக் கொடுத்ததாலேயே நாம் தோற்றோம். இதற்கு நீங்கள் தான் காரணம்” என்று அந்த வீடியோவில் பலர் கமெண்ட் போட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இங்கே ராகுல் டிராவிட் எங்களுக்கு பயிற்சியாளராக இருப்பது போல் ஆஸ்திரேலிய அணிக்கு அண்ட்ரூ மெக்டொனால்ட் இருக்கிறார். ஆனால் நான் போட்ட வீடியோவை ஆஸ்திரேலியர்கள் பார்த்து தான் அப்போட்டியில் வென்றதாக ரசிகர்கள் தெரிவித்தது எனக்கு வேடிக்கையாகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் அமைத்தது”

“குறிப்பாக ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் எப்படி நான் ஒரு வீடியோவை வைத்து அனைத்தையும் கற்றுக் கொடுத்து வெற்றி பெற வைத்திருக்க முடியும் என்பதை நினைத்து எனக்கே ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த நாளே ரசிகர்களின் இந்த கருத்துக்களால் அட்மின் அந்த போட்டியின் தலைப்பை மாற்றினார். அவரிடம் நான் “நீங்கள் தலைப்பை மாற்றி விட்டீர்கள். ஆனால் உண்மையாகவே ஆஸ்திரேலியா நம்முடைய தமிழ் வீடியோவில் இருக்கும் சப் டைட்டில்ஸ் பார்த்து சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா” என கேட்டேன்”

இதையும் படிங்க: ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியல். அஷ்வின் மற்றும் விராட் கோலி கண்டுள்ள முன்னேற்றம் – விவரம் இதோ

“ஒருவேளை அவர்கள் அந்த வீடியோவை பார்த்து வென்றிருந்தால் நம்முடைய சேனல் இன்னும் வளர்ந்திருக்க வேண்டுமல்லவா? மேலும் இப்போதிலிருந்து இந்தியாவில் எப்படி வெல்வது என்பதற்கு அந்த வீடியோவை பார்த்தால் போதும் என்பதால் எந்த அணிக்குமே பயிற்சியாளர்கள் தேவையில்லையே? என்று எனது அட்மினிடம் தெரிவித்தேன். மொத்தத்தில் சமூக வலைதளங்கள் எனும் உலகில் அனைத்தும் காட்டு தீ போல் பரவுகிறது” என்று கலகலப்பாக கூறினார்.

Advertisement