IND vs AUS : பேசாம நான் டீம விட்டு போயிடுறேன், தாறுமாறாக கலாய்த்த அஷ்வின் – புஜாராவின் கலகலப்பான நன்றிக்கடன் பதில் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா கடந்த 10 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. இருப்பினும் 3வது போட்டியில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த நிலையில் அகமதாபாத் நகரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா 480 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு 571 ரன்கள் குவித்து பதிலடி கொடுப்பதற்குள் 4 நாட்கள் முடிந்தது.

ஆனால் அப்போட்டி முடிவதற்குள் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்ததால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு 2வது அணியாக தகுதி பெற்றது. அது இப்போட்டியின் உணவு இடைவெளியில் தெரிந்து விட்டதால் நிம்மதியடைந்த கேப்டன் ரோகித் சர்மா எப்படியும் இப்போட்டி ட்ராவில் முடியப்போகிறது என்பதை அறிந்து செட்டேஸ்வர் புஜாரா, சுப்மன் கில் ஆகிய பேட்ஸ்மேன்களை கடைசி நேரத்தில் பந்து வீச அழைத்தார்.

- Advertisement -

கலாய்த்த அஷ்வின்:
இதில் சுப்மன் கில் தனது கேரியரில் முதல் முறையாக பந்து வீசியதை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் வழக்கம் போல சில கிண்டல்களை வெளிப்படுத்தினர். அதை விட பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்து பவுலர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடிய புஜாரா நீண்ட நாட்கள் கழித்து இப்போட்டியில் சிரித்த முகத்துடன் பந்து வீசியதை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் “என்னப்பா இப்படி பந்து வீசுகிறார்” என்று மைதானத்திலேயே சிரித்து வித்தியாசமான ரியாக்சன் கொடுத்து கலாய்த்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நிலைமையில் போட்டி முடிந்ததும் புஜாரா பந்து வீசிய புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட அஷ்வின் “நான் இனிமேல் என்ன செய்யட்டும்? என்னுடைய வேலையை விட்டு விடட்டுமா” என்று தாறுமாறாக கலாய்த்தார். அதற்கு “இல்லை. இது நாக்பூரில் முதல் விக்கெட் விழுந்ததும் நீங்கள் பேட்டிங் செய்ய சென்றதற்கு நன்றி தெரிவிப்பதற்கானது” என்று புஜாரா கலகலப்புடன் பதிலளித்தார். அதாவது இத்தொடரின் முதல் போட்டி நடைபெற்ற நாக்பூரில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு அவுட்டான போது களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் நாளின் மாலை நேரத்தில் கேஎல் ராகுல் 20 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அப்போது வழக்கம் போல 3வது இடத்தில் களமிறங்க வேண்டிய புஜாராவிடம் நைட் வாட்ச்மேன் தேவையா என்று இந்திய அணியின் நிர்வாகம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் ஆம் என்று தெரிவித்ததால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனான அஷ்வின் அவர் விளையாடும் 3வது இடத்தில் களமிறங்கி முதல் நாளின் மாலை நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்காமல் விக்கெட்டையும் விடாமல் 23 ரன்கள் குவித்து அடுத்த நாள் காலையில் தான் ஆட்டமிழந்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் ட்ராவில் முடியப்போகும் இந்த போட்டியில் நீங்கள் வீச வேண்டிய சில ஓவர்களை வீசி நன்றி கடனை செலுத்தியதாக புஜாரா அஸ்வினுக்கு பதிலளித்தார். அதற்கு “உங்களுடைய எண்ணம் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த நன்றியை நீங்கள் இப்படி திருப்பி செலுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று மீண்டும் புஜாராவுக்கு அஸ்வின் பதிலளித்தார்.

இதையும் படிங்க:IND vs AUS : எனக்கும் ரோஹித் பாய்க்கும் அவரோட பவுலிங் தான் கஷ்டமா இருந்துச்சி – சுப்மன் கில் வெளிப்படை

அதற்கு “இது போன்ற ஓவர்களை வீசி உங்களுக்கு போதிய ஓய்வு வழங்குகிறேன். அப்போது தான் வருங்காலத்தில் ஒன் டவுனில் விளையாட வேண்டிய சூழல் வந்தால் நீங்கள் எனக்காக களமிறங்குவீர்கள்” என்று மீண்டும் புஜாரா கலகலப்புடன் பதிலளித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தங்களது மிகச்சிறந்த திறமையால் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி சீனியர் கிரிக்கெட் வீரர்களாக ஜொலித்து வரும் இவர்கள் ட்விட்டரில் இப்படி கலகலப்புடன் பேசியது வைரலாகி வருகிறது.

Advertisement