வங்கதேசத்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்திற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. முன்னதாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் 2, 3வது நாட்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக மூன்றாவது நாளில் ஒரு துளி கூட மழை பெய்யாததால் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை நீரை வெளியேற்றுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் 3வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை கடுப்பேற்றியது. அதன் காரணமாக அப்போட்டி டிராவில் முடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல:
அதையும் தாண்டி கடைசி 2 நாட்களில் பட்டாசாக விளையாடிய இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்து அசத்தியது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் எப்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும் அது பெர்த், பிரிஸ்பென், அடிலெய்ட், மெல்ப்ரோன், சிட்னி ஆகிய 5 மைதானங்களில் மட்டுமே நடக்கும். இங்கிலாந்திலும் அதே போன்ற நிலை தான் கடைபிடிக்கப்படுகிறது.
அதனால் அந்த 5 மைதானங்களில் மட்டும் மழை பெய்து நின்றால் விரைவில் போட்டியை துவங்கும் அளவுக்கு உச்சகட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மைதானம் இருப்பதால் பிசிசிஐ நினைக்கும் இடங்களில் எல்லாம் டெஸ்ட் போட்டிகளை நடத்துகிறது. அந்த மைதானங்கள் மழை பெய்தால் இப்படி போட்டி பாதிக்கப்படும் அளவுக்கு மோசமான வசதிகளையே கொண்டுள்ளது.
அஸ்வின் அட்வைஸ்:
இந்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டும் நடத்துவது மூளையற்ற முடிவாக இருக்காது என பிசிசிஐக்கு அஸ்வின் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நம்முடைய பெரிய நாட்டில் நிறைய மைதானங்கள் இருப்பது ஒவ்வொருவரும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும் என்பது மிகப்பெரிய நேர்மறையான விஷயமாகும்”
இதையும் படிங்க: நான் மந்திரவாதில்லாம் கிடையாதுங்க.. என்கிட்ட கத்துக்கிட்டு விளையாடும் அவர் நல்லா வருவாரு.. பும்ரா
“இருப்பினும் அங்கே வானிலை மற்றும் வடிகால் வசதி போன்றவற்றில் நாம் முதலீடு செய்ய வேண்டும். அவை மூளையற்ற முடிவு கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தியா 5 மைதானங்களில் மட்டுமே விளையாடுகிறோம். அவர்கள் கான்பெரா உள்ளிட்ட மற்ற மைதானங்களில் இந்தியாவை விளையாட விடுவதில்லை. இங்கிலாந்தும் அதே போலவே குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்துகிறது. அதை நம்மால் இங்கே செய்ய முடியுமா? அது என்னுடைய வேலையில்லை. அதைப்பற்றி நான் கருத்தும் சொல்ல முடியாது” என்று கூறினார்.