அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் அந்த டெஸ்ட் தொடரை இழந்ததோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் சிக்கலாக மாற்றியுள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணிக்கெதிரான தோல்வி வருத்தம் தான் :
சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு எளிதாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 12 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சீனியின் வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணமாக பார்க்கப்பட்டது. அதோடு இந்திய அணியின் பந்துவீச்சும் இந்த தொடரில் சற்று தொய்வினை சந்தித்திருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அடைந்த தோல்விக்கு நானும் முக்கிய காரணம் என சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வர எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. என்னை பொறுத்தவரை இந்த தோல்வி என்னை மிகவும் பாதித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஏராளமான தோல்விகளை நாங்கள் இதற்கு முன் சந்தித்து இருந்தாலும் வாழ்க்கையிலேயே இதுதான் மிகவும் மோசமான தோல்வி என்று நினைக்கிறேன்.
இந்த தோல்விக்கு மிகவும் நானும் மிகவும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் பின் வரிசையில் விளையாடும் நாங்கள் சேர்க்கும் ரன்கள் மிக முக்கியமானது. இந்த தொடரில் நான் பேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் பங்களிப்பை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் சொதப்பிவிட்டேன்.
இதையும் படிங்க : 3 – 0 தோல்விக்கு மன்னிப்பு கேட்கணுமா? இந்த வேதனை இந்திய ரசிகர்களுக்கு தெரியுமா? அஸ்வின் ஆதங்கம்
இந்த தொடரில் அடைந்த தோல்வி விமர்சிக்கப்பட்டது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இருப்பினும் இறுதியில் இது ஒரு விளையாட்டு நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வர உழைப்போம் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



