3வது போட்டி துவங்கியதும் ஐசிசி தரவரிசையில் உலக சாதனை படைத்த அஷ்வின் – இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதியன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் துவங்கிய இத்துடன் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 7 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இம்முறை மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் நாள் முடிவில் 156/4 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அப்படி விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டி தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

தமிழகத்துக்கு பெருமை:
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஏற்கனவே 450+ விக்கெட்டுகளை எடுத்து ஜாம்பவானுக்கு நிகராக போற்றப்படும் சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கி தூங்க விடாமல் உலக சாதனை படைத்துள்ள அவர் இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக 2வது போட்டியில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஒரே ஓவரில் காலி செய்த அவர் ஏற்கனவே தரவரிசையில் 2வது இடத்தில் இருந்ததால் முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 வயதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து 1936க்குப்பின் மூத்த வயதில் முதலிடம் பிடித்த பவுலராக உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த 2வது போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவர் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து வெற்றி பெறும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக 2வது இடத்திற்கு சரிந்த அவரை மிஞ்சிய ரவிச்சந்திரன் அஷ்வின் 864 புள்ளிகளுடன் உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக முன்னேறி முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். சொல்லப் போனால் ஏற்கனவே கடந்த 2015 வாக்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் 8 வருடங்கள் கழித்து அந்த இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவுக்காக அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்தது முதல் அதிக தொடர் நாயகன் விருதுகள் வென்றது வரை ஏராளமான சாதனைகளை படைத்து சரித்திர வெற்றிகளை பரிசாக்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் பவுலராக இருப்பது உண்மையாக தமிழக ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : தனது ஆல் டைம் சாதனையை அசால்ட்டாக சமன் செய்த உமேஷ் யாதவின் அதிரடி பேட்டிங்கை கொண்டாடிய விராட் கோலி

இதே தர வரிசையில் இந்தியா சார்பில் அடுத்தபடியாக பும்ரா 4வது இடத்திலும் ரவீந்திர ஜடேஜா 8வது இடத்தில் உள்ளனர். இருப்பினும் இந்தூரின் நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதல் நாளில் இதுவரை விக்கெட் வேட்டையை அஷ்வின் துவக்காத நிலையில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இருப்பினும் மிகவும் தரமான ஸ்பின்னரான அஷ்வின் நிச்சயமாக 2வது நாளில் மிகச் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement