இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு கொடுக்கப்படும் தொடர்ச்சியான வாய்ப்புகள் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் அவர் கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதற்காக இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு கௌதம் கம்பீர் 3 விதமான கிரிக்கெட்டிலும் வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளார்.
ஆனால் அந்த வாய்ப்பில் இதுவரை ராணா பெரியளவில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற திறமையை நிரூபித்த வீரர்களைக் காட்டினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் இந்திய அணியில் அவருக்கு எதனால் வாய்ப்பு கிடைக்கிறது? என்பது தெரியவில்லை என்று ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் விமர்சித்திருந்தார்கள்.
டார்கெட் பண்ணாதீங்க:
குறிப்பாக கம்பீருக்கு ஆமாம் போடும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதாக ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்தார். அதே போல சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் ராணாவை பல ரசிகர்கள் விமர்சித்தனர். அதற்கு என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், ராணா போன்ற 23 வயது குழந்தை வீரரை விமர்சிக்காதீர்கள் என்று கம்பீர் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் ஹர்ஷித் ராணாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது நியாயமல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வரைமுறைக்கு கீழே யாரும் விமர்சனம் செய்யப்படக்கூடாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். விமர்சனங்கள் தனிப்பட்ட வரும் போது அதனுடைய வகை மாறும்”
அஸ்வின் ஆதரவு:
“சஞ்சய் மஞ்ரேக்கர் என்னுடைய கேரியர் முழுவதும் என்னை விமர்சித்துள்ளார். ஆனால் அவர் மேலே நான் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது தனிப்பட்ட தாக்குதலாக இல்லாதவரை பிரச்சனையில்லை. ஒருவேளை இப்படிப்பட்ட விமர்சனத்தை இந்தியாவுக்கு விளையாடுவதற்கு முன் ராணா பார்க்கிறார் என்றால் உடைந்து போக மாட்டாரா? அவருடைய பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா உடல் எடையை குறைக்க காரணமே அந்த ஏர்போர்ட் சம்பவம் தான் – அபிஷேக் நாயர் பகிர்வு
“அவருடைய செயல்திறன் மற்றும் ஸ்டைலை நாம் விமர்சிக்கலாம். ஆனால் அதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் செல்லக்கூடாது. ஓரிருமுறை வேடிக்கைக்காக சொன்னாலும் அதுவே கருப்பொருளாக மாறிவிடக்கூடாது. இன்று ராணாவை அனைவரும் அனைத்து பக்கமும் சேர்ந்து விமர்சிக்கின்றனர். ஒருவேளை அவர் அடுத்த வருடம் வருடம் சிறப்பாக செயல்பட்டால் இன்று விமர்சிப்பவர்கள் அனைவரும் பாராட்டுவார்கள் அல்லவா? என்னுடைய சேனலில் கிரிக்கெட்டை எப்போதும் கிரிக்கெட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். குப்பை போன்ற பேச்சுக்கள் வேண்டாம். கனவில் அது உங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினராக கூட இருக்கலாம்” என்று கூறினார்.



