ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை களமிறக்கும் வேலையை துவங்கியுள்ள பிசிசிஐ 2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் அடங்கிய முதன்மை அணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட அதில் சுழல் பந்து வீச்சு துறையில் முதன்மை ஸ்பின்னராக யுஷ்வேந்திர சஹால் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஒரு கட்டத்தில் முதன்மை ஸ்பின்னராக இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2017 சாம்பியன்ஸ் டிராபில் ஒரு சில போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடி வந்த அவருக்கு 2020 வாக்கில் சஹால் – குல்தீப் யாதவ் ஆகியோர் ஃபார்மை இழந்து திண்டாடியதால் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் 4 வருடங்கள் கழித்து நேரடியாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அஷ்வின் வேண்டும்:
அதில் முழுமையான வாய்ப்பு பெறாவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அஷ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையிலும் தேர்வானார். அந்த வாய்ப்பில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றிய அவர் முதன்மை வேலையான சுழல் பந்துவீச்சில் குறைந்த ரன்களை கொடுத்தாலும் அதிக விக்கெட்டுகளை எடுக்காமல் தடுமாறினார்.

அதனால் 2022 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கும் லெக் ஸ்பின்னரான சஹால் விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எனவே 2023 உலக கோப்பையில் சஹால் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில் அவரை விட அனுபவமிக்க அஷ்வின் தான் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஆதரவு கொடுத்துள்ளார்.
கடைசியாக கடந்த 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த அஷ்வின் 113 போட்டிகளில் 151 விக்கெட்களை 4.94 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து அனுபவம் கொண்டவர் என்பதால் மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கும் அஜய் ஜடேஜா பும்ரா, ஷமி ஆகியோருடன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அர்ஷிதீப் சிங் 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களுக்கு பின்பு உம்ரான் மாலிக், சஹால் ஆகியோர் பேக்-அப் பவுலர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“நானாக இருந்தால் அந்த உலகக் கோப்பையில் அஷ்வினை விளையாட வைப்பேன். ஏனெனில் அந்த உலகக்கோப்பையில் சுழல் பந்து வீச்சு முக்கிய பங்காற்றும். சஹால் இருந்தாலும் தற்போது அவரை நீங்கள் விளையாட வைக்க வேண்டியதில்லை. மாறாக அஷ்வின் தான் விளையாட வேண்டும். எனவே அதில் யார் வேண்டுமென்று நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர்களும் தயாராக உள்ளனர். அதே போல் முதல் வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ராவை நிச்சயமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவருடன் தற்சமயத்தில் உள்ள ஃபார்முக்கு முகமது சமியை நான் தேர்ந்தெடுப்பேன்”
இதையும் படிங்க: உங்க சர்வீஸ் போதும், விராட் கோலியிடம் தோனி ஒப்படைத்த மாதிரி நீங்களும் செய்ங்க – ரோஹித்துக்கு அஜய் ஜடேஜா அட்வைஸ்
“ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை எந்த வகையிலும் நாம் கழற்றி விட முடியாது. அவர்களைத் தொடர்ந்து நான் அர்ஷிதீப் சிங்கை தேர்வு செய்வேன். சமீபத்திய போட்டிகளில் அவர் சுமாராக செயல்பட்டிருந்தாலும் அவர் தான் நம்முடைய வருங்காலமாக உள்ளார். மேலும் நம்முடைய ஒரே இடதுகை பந்து வீச்சாளராக இருக்கும் அவர் புதிய பந்தில் அசத்தும் திறமை கொண்டுள்ளார். அவரை பழைய பந்துக்கு பதிலாக புதிய பந்தில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே அவருடன் உம்ரான் மாலிக்கையும் நான் தேர்வு செய்வேன். அதன் பின்பு தான் சஹால் அந்த அணியில் இருப்பார்” என்று கூறினார்.



