ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் முனைப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை 2025இல் மோசமாக விளையாடி முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. அதனால் சுமாரான வீரர்களை கழற்றி விட்ட சென்னை அணி இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளது.
அதற்காக லசித் மலிங்கா போல பந்து வீசும் ஸ்டைலை கொண்ட மதிஷா பதிரனாவையும் சிஎஸ்கே கழற்றி விட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் டெத் ஓவர்களில் மலிங்கா போல யார்கர் பந்துகளை போட்டு விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கின்றது. அதை வைத்து 2023 சீசனில் அசத்திய அவர் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவினார்.
எலிஸ் அசத்தல்:
இருப்பினும் அதற்கடுத்த சீசன்களில் சுமாராக பந்து வீசிய அவர் அடிக்கடி காயமடைபவராகவும் இருப்பதால் சிஎஸ்கே அணி கழற்றி விட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற 15வது போட்டியில் ஹோபர்ட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் அணியை தோற்கடித்தது.
அப்போட்டியில் ஹோபார்ட் அணி வெற்றி பெறுவதற்கு பந்து வீச்சுத் துறையில் கேப்டன் நாதன் எலிஸ் 4 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 16 – 20 வரையிலான டெத் ஓவரில் மிகச்சிறப்பாக பவுலிங் செய்த அவர் 15 ரன்கள் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
அஸ்வின் கருத்து:
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாதன் எலிஸ் டெத் ஓவர்களில் அசத்தும் திறமைக் கொண்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். எனவே பதிரனாவுக்கு பதில் அவர் 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் பங்காற்றுவார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: மீண்டும் விஜய் ஹசாரே கோப்பையில் களமிறங்கும் விராட் கோலி.. இந்திய அணிக்கு வரும் முன் அதிரடி முடிவு
“எலிஸ் எப்படி வடிவமைக்கப்பட்ட வருகிறார் என்பதைப் பற்றி மஞ்சள் அணி மகிழ்ச்சியடைவார்கள். இன்று ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக அவர் 4-0-30-3 என்ற பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் முக்கியமாக 17, 20வது ஓவர்களை வீசிய அவர் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். யார்கர்களை நன்றாக வீசும் அவர் வேகத்தையும் மாற்றுகிறார். எனவே 2026 கோடைகாலத்தில் சேப்பாக்கத்தில் 2 டெத் ஓவர்கள் எலிஸ்க்கு பூட்டப்பட்டுள்ளது என்று பாதுகாப்புடன் சொல்லலாம்?” எனப் பதிவிட்டுள்ளார்.



