டி20 உ.கோ’யில் விளையாட சஹாலை விட நான் சரியானவன் – நேரடியாக நிரூபித்த அஷ்வின், முழுவிவரம் இதோ

Chahal and Ashwin
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக முன்னதாகவே அங்கு பயணித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் அக்டோபர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவை போராடி தோற்கடித்த இந்தியா அக்டோபர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் மீண்டும் எதிர்கொண்டது. பெர்த் நகரில் இருக்கும் வாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வெடுத்த நிலையில் அணியை வழி நடத்திய கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 168/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜோஸ் பிலிப் 8 ரன்களில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டார்சி ஷார்ட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (38) ரன்களும் நிக் ஹோப்சன் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 64 (41) ரன்களும் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் இந்தியாவின் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியா தோல்வி:
அதை தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்காத நிலையில் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வெடுத்த சூழ்நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரிஷப் பண்ட் 9 (11) தீபக் ஹூடா 6 (9) ஹர்திக் பாண்டியா 17 (9) அக்சர் பட்டேல் 2 (7) தினேஷ் கார்த்திக் 10 (14) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் கேஎல் ராகுல் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 74 (55) ரன்களை குவித்தாலும் கடைசி வரை அதிரடியை தொடங்காமல் போராடி ஆட்டமிழந்தார்.

அதனால் 20 ஓவரில் 132/8 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் பவுலர்கள் தங்களது வேலையை சரியாக செய்த போதிலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க தவறியது தோல்வியை கொடுத்தது என்றே கூறலாம். இருப்பினும் சமீபத்திய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய பவுலர்கள் இப்போட்டியில் ஓரளவு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அசத்திய அஷ்வின்:
குறிப்பாக ஆரம்பம் முதலே ரன்களை குறைவாகக் கொடுத்து அழுத்தத்தை ஏற்படுத்திய தமிழக வீரர் அஷ்வின் தன்னுடைய கடைசி ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் எடுத்த 2 விக்கெட்டுக்கள் உட்பட ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அவரது அற்புதமான பந்து வீச்சு காரணமாக 15 ஓவரில் 136/3 என்ற வலுவான நிலையில் இருந்த மேற்கு ஆஸ்திரேலியா 180 – 200 ரன்களை தொட  முடியாமல் இறுதியில் 168 ரன்களை மட்டுமே எடுத்தது. ஒரு காலத்தில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்த அஷ்வின் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஒருசில போட்டிகளில் சுமாராக பந்து வீசியதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆச்சர்யப்படும் வகையில் நேரடியாக 4 வருடங்கள் கழித்து தேர்வானார். அதில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் கடந்த ஒரு வருடமாகவே இதே போல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் விக்கெட் எடுக்கும் பவுலராக இருப்பதில்லை என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சிக்கின்றனர். மேலும் ஐபிஎல் 2022 தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த சஹால் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்ய வேண்டுமென்ற கருத்துக்களும் காணப்படுகிறது.

ஆனால் சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக பந்து வீசிய அவர் தென் ஆப்ரிக்க தொடரில் அதிரடியாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அத்துடன் அவருக்கு பேட்டிங்கில் ரன்களை குவிக்கும் திறமையும் இல்லை. மறுபுறம் 2015 உலகக்கோப்பை உட்பட ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் கொண்ட அஷ்வின் பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களைக் குவிக்கும் திறமை பெற்றுள்ளார். எனவே சஹாலுக்கு பதில் உலகக்கோப்பை 11 பேர் அணியில் விளையாட தாம் தகுதியானவன் என்பதை அஷ்வின் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் ஒருமுறை சிறப்பாக செயல்பட்டு நேரடியாக நிரூபித்துள்ளார்.

Advertisement