WTC Final : ஃபைனலில் பிட்ச் எப்படி இருக்கும்? ஓவல் மைதான தயாரிப்பாளரிடம் நேரடியாக அஸ்வின் வாங்கிய ரிப்போர்ட் இதோ

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. அந்த போட்டியில் வென்று வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைக்க உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவும் 2வது இடத்தில் இருக்கும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. குறிப்பாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க், ஷமி என 2 அணிகளிலும் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இந்தியா கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த நிலையில் இம்முறை அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சௌதம்டன் நகரில் நடைபெற்ற கடந்த ஃபைனலில் அடிக்கடி மாறக்கூடிய இங்கிலாந்தின் கால சூழ்நிலையை சரியாக கணிக்கத் தவறிய இந்தியா அஸ்வின் – ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அஸ்வின் ரிப்போர்ட்:
அதனால் இம்முறை ஜடேஜா மட்டும் விளையாடி 4வது பவுலராக தாக்கூர் விளையாட வேண்டுமென்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. இருப்பினும் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவரும் சேர்ந்தாற்போல் விளையாட வேண்டும் என ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓவல் மைதானம் சுழலை விட பவுன்ஸ் மற்றும் வேகத்துக்கு தான் அதிக சாதகமாக இருக்கும் என அந்த மைதானத்தின் பிட்ச் தயாரிப்பாளர் லீஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவரை நேரடியாக சந்தித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் எடுத்த கலகலப்பான வீடியோவில் நிகழ்ந்த உரையாடல்கள் பின்வருமாறு.
அஸ்வின்: இங்கே பிட்ச் டாக்டர் இருக்கிறார். அதாவது ஓவல் மைதானத்தின் பிட்ச்சை உருவாக்கி அதற்கு பொறுப்பேற்கக் கூடியவர் இருக்கிறார். ஹாய் லீஸ், எப்படி இருக்கீங்க?
லீஸ்: நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கீங்க ரவி?
அஸ்வின்: நன்றாக இருக்கிறேன். ஏன் என்னை தள்ளுகிறீர்கள்? சரி இந்த மைதானத்தில் என்ன இருக்கிறது என்பதை சொல்லுங்கள்

- Advertisement -

லீஸ் : வழக்கமான நல்ல ஓவல் பிட்ச்சாக இருக்கும்
அஸ்வின்: நீங்கள் எப்போதுமே சிறப்பான பிட்ச்களை தயாரித்துள்ளீர்கள். ஆனால் தற்போது நாங்கள் பயிற்சிகளை எடுத்த போது எங்களுடைய வீரர்கள் வேகப் பந்துகளால் தாக்கப்பட்டனர். எனவே அதே போல வேகத்துக்கு சாதகமாக இருக்குமா? என்ன நினைக்கிறீர்கள்?
லீஸ் : அப்படியா? இன்று பவுன்ஸ் ஆனதா?
அஸ்வின் : ஆம் இன்றே அதிகமாக பவுன்ஸ் ஆனது? நீங்கள் என்னை விரும்பவில்லை. அதனால் இங்கே சுழல் எடுபடாது. சரி தானே?
லீஸ் : இதற்கு முன் நீங்கள் சர்ரே அணிக்காக கவுண்டி தொடரில் விளையாடியுள்ளீர்கள். அப்போது எத்தனை விக்கெட்டுகள் எடுத்தீர்கள்?

அஸ்வின் : 8 விக்கெட்களை எடுத்தேன். இருப்பினும் இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த ஃபைனலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? மேலும் பிரட் லீ மிரட்டும் அளவுக்கு பவுன்ஸ் நிறைந்த பிட்ச் இப்போட்டியில் இருக்குமா?
லீஸ் : அதை பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் அதில் நிச்சயமாக பவுன்ஸ் இருக்கும். அது மட்டும் என்னால் கேரண்டியாக சொல்ல முடியும். அதில் பவுன்ஸ் இருக்கும்

இதையும் படிங்க:WTC Final : இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அஷ்வின் விளையாட வாய்ப்பே இல்ல. ஏன் தெரியுமா? – விவரம் இதோ

இதிலிருந்து ஓவல் மைதானம் வேகத்துக்கு அதிக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியின் கடைசி 2 நாட்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் 4 வேகம் மற்றும் 1 சுழல் பந்து வீச்சு கூட்டணியுடன் களமிறங்குவதே வெற்றியை கொடுக்கலாம்.

Advertisement