
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 5-ஆம் தேதியன்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் ராஜஸ்தனை தோற்கடித்த பெங்களுரு 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. உலகப்புகழ் பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/3 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் சதமடித்திருந்த நிலையில் இந்த போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் 47 பந்துகளில் 6 சிக்ஸர் உட்பட 70* ரன்களை விளாசினார். அவருக்கு துணையாக கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய சிம்ரோன் ஹெட்மையர் 31 பந்துகளில் 42* ரன்கள் குவித்தார்.
ராஜஸ்தான் முதல் தோல்வி:
அதை தொடர்ந்து 170 என்ற நல்ல இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மற்றும் அனுஜ் ராவத் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்தனர். அதில் டு பிளேஸிஸ் 29 (20 ரன்களிலும் அனுஜ் ராவத் 26 (25) ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நிலையில் அவருடன் களமிறங்கிய டேவிட் வில்லி டக் அவுட்டாக அடுத்து வந்த ரூதர்போர்டு 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி மேலும் அளித்தார். இதனால் 87/5 என்ற மிடில் ஓவர்களில் தடுமாறிய பெங்களூருவின் வெற்றி கேள்விக்குறியானது.
அப்போது களமிறங்கிய இளம் வீரர் சபாஷ் அகமத் 26 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடியாக 45 ரன்களை குவித்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருக்கு உறுதுணையாய் நின்ற தமிழக நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 44* ரன்கள் எடுத்து அபார பினிஷிங் செய்ததால் 19.1 ஓவர்களில் 173/6 ரன்கள் எடுத்த பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய சஹால் மற்றும் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இந்த தோல்வியால் இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை ரசித்து வந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.
அஷ்வின் மீது எழும் குற்றசாட்டு:
முன்னதாக இந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஒரு ஓவர் தான் காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் ப்ரேத்வைட் குறை கூறியுள்ளார். இந்த ஐபிஎல் தொடருக்காக பிரபல இணையத்தில் வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய அந்த ஒரு ஓவர் தான் ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. ஆனால் புதிய பந்தை பயன்படுத்தி ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் எடுக்கத் தவறியது. இருப்பினும் பெங்களூரு ஓப்பனர்கள் சிறப்பாக விளையாடியதால் அதன்பின் ஒருசில விக்கெட்டுகளை இழந்தாலும் கூட அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது” என கூறினார்.
இந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை பெற்ற பெங்களூரு அதிரடியாக சேசிங் செய்து கொண்டிருக்கும்போது சுதாரித்த ராஜஸ்தான் விராட் கோலி 5, டேவிட் வில்லி 0, ரூதர்போர்ட் 5 என மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தனது பக்கம் திருப்பியது. அப்போது போட்டி முழுக்க ராஜஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் 14-வது ஓவரை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீச அதை பெங்களூருவுக்காக விளையாடிய மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக எதிர்கொண்டு 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் அந்த ஓவரில் அஷ்வின் 21 ரன்களை வாரி வழங்கியதால் ராஜஸ்தான் கையிலிருந்த வெற்றி அப்படியே பெங்களூருவுக்கு மாறியதாக கார்லஸ் ப்ரேத்வைட் தெரிவித்தார்.
சஹால் வீசி இருக்கவேண்டும்:
உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்திற்காக ஒரே அணியில் விளையாடுவதால் அஸ்வின் பவுலிங் பற்றி தினேஷ் கார்த்திக் நன்கு தெரிந்து வைத்திருப்பார் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் அவரை சரமாரியாக அடித்த தினேஷ் கார்த்திக் 21 ரன்களை குவித்து தனது அணிக்கு வெற்றியை தேடித் கொடுத்தார். அது போன்ற நிலைமையில் அஸ்வின் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த தினேஷ் கார்த்திக்கு எதிராக யூஸ்வென்ற சஹால் பந்து வீசியிருக்க வேண்டும் என கார்லஸ் ப்ரேத்வைட் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சின்ன பையனா ஒல்லியா இருக்காரு. சிக்ஸ் அடிப்பாரான்னு நெனச்சாங்க. ஆனா பொளந்துட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் புகழாரம்
அந்த நேரத்தில் அந்த ஒரு சிறிய விஷயத்தை கேப்டன் சஞ்சு சாம்சன் கவனிக்கத் தவறியதால் ராஜஸ்தானின் வெற்றி பரிபோனதாக அவர் கூறியுள்ளார். மேலும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்த பெங்களூருவை புதிய பந்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறிய ராஜஸ்தானின் தோல்விக்கு அஷ்வின் மட்டும் முழு காரணம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.