
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கொஞ்சம் கூட போராடாமல் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று ஏமாற்றத்துடன் வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது. இத்தனைக்கும் ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்து 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த காரணத்தால் இப்போட்டியில் நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பி தோல்வியை சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.
அத்துடன் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாமல் கழற்றி விட்டது தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது. அந்த வகையில் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து எந்த படத்தையும் கற்காத இந்தியா இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதே தவறுகளை செய்து தோற்றது. இது மட்டுமல்லாமல் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் 2014 முதலே லீக் சுற்றில் சிறப்பாக செயல்படும் இந்தியா நாக் அவுட் சுற்றில் முக்கிய தருணங்களில் சொதப்பி தோல்வியை சந்திப்பதற்கான காரணம் ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே அமைந்து வருகிறது.
இந்தியாவின் நிலை:
அதற்கு டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக செயல்படாததும் நாக் அவுட் போட்டிகளில் பயமின்றி தைரியமாக அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்த தவறியதும் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரும் தான் காரணம் என்று பல விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரு காலத்தில் வீரர்கள் அனைவருமே நண்பர்களாக பழகி யுக்திகளை பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சீனியர்களாக உருவாக்கி விட்டதால் அந்த நிலைமை மாறிவிட்டதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் அனைவரும் ஒன்றாக இருப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது மிகவும் ஆழமான தலைப்பாகும். அது அனைவரும் நண்பர்களாக இருந்த சகாப்தமாகும். ஒரு காலத்தில் உங்கள் அணியைச் சேர்ந்த அனைவரும் நண்பர்களாக இருந்தனர். தற்போது அவர்கள் சக வீரர்களாக மாறி விட்டனர். ஒரு பெரிய வித்தியாசம் என்னவெனில் இங்கே இருப்பவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும் வலது மற்றும் இடது பக்கத்தில் அமர்ந்திருப்பவரை விட அதிகமாக சாதித்து முன்னேறுவதற்கும் காத்திருக்கிறார்கள்”
“எனவே சரி நண்பா நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? என்று இப்போது சொல்வதற்கு யாருக்கும் நேரமில்லை. சொல்லப்போனால் நீங்கள் உங்களுடைய திறமைகளை மற்றவர்களுடன் பகிரும் போது தான் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க முடியும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக மற்றொருவரின் டெக்னிக் மற்றும் பயணத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் போது அது இன்னும் சிறப்பாக மெருகேறும் என்றே சொல்லலாம். ஆனால் தற்போது அது நடைபெறுவதில்லை. அதாவது உங்களுக்கு உதவி செய்ய யாரும் வருவதில்லை என்பதால் இது தனிமைப்படுத்தப்பட்ட பயணமாக இருக்கிறது”
“இருப்பினும் நீங்கள் உயர்ந்த அளவில் சிறப்பாக செயல்படுவதற்கு நிச்சயமாக ஒரு தகுதியான பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி பயிற்சிகளை செய்து சாதிக்க முயற்சிப்பீர்கள். ஆனால் சில சமயங்களில் கிரிக்கெட் என்பது மிகவும் சுயமாக கற்றுக் கொள்ளப்பட வேண்டிய விளையாட்டு என்பதை நாம் மறந்து விடுகிறோம்” என கூறினார்.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆவது பங்களாதேஷ் வீரராக நஜ்முல் ஷாண்டோ படைத்த வரலாற்று சாதனை – என்ன தெரியுமா?
முன்னதாக இந்தியாவின் கேப்டன் பதவிக்காக 2019 உலகக்கோப்பையின் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடையே விரிசல் ஏற்பட்டதாகவும் அதை அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் இருவரையும் நேராக அழைத்து உட்கார வைத்து பேசி சரி செய்ததாகவும் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் சில வீரர்கள் சூப்பர் ஸ்டாராக வர நினைப்பதால் ஒற்றுமையின்மை இல்லாமல் இருப்பது தோல்விகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.