தப்பா நினைக்குறாங்க, எனக்கு இந்தியாவின் கேப்டன்ஷிப் கிடைக்காதற்கு அது தான் காரணம் – அஸ்வின் ஆதங்க பேட்டி

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் வெறும் கையுடன் நாடு திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாமல் விட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் 2019 – 2021, 2021 – 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்து அடுத்தடுத்த ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற முக்கிய பங்காற்றிய அவர் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக திகழ்கிறார்.

Gavaskar-and-Ashwin

- Advertisement -

அதை விட ஏற்கனவே அதிக இடது கை வீரர்களை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ள அவர் சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் இருந்த 5 இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயமாக சவாலை கொடுத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதை செய்யாத இந்திய அணி நிர்வாகம் உலகின் நம்பர் ஒன் பவுலரை ஃபைனலில் கூல்டிரிங்ஸ் தூக்க வைத்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கேப்டன்ஷிப் வாய்ப்பு:
இத்தனைக்கும் 5 சதங்களை அடித்து ஐசிசி ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்திலும் இருக்கும் அஸ்வினுக்கு ஜாம்பவான் கபில் தேவுக்கு நிகராக கடந்த 10 வருடங்களாக 450க்கும் விக்கெட்களையும் 3000க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்து சச்சினை விட அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்று நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தும் இதுவரை விளையாடும் 11 பேர் அணியில் நிரந்தரமான இடம் கிடைப்பதில்லை என்பது உண்மையான கசப்பாகும். குறிப்பாக ஆரம்ப காலங்களில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அசத்தினார் என்பதற்காக தற்போது அனுபவத்தால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறப்பாக செயல்பட்டும் “வெளிநாட்டில் சரிபட்டு வரமாட்டார்” என்ற கண்ணோட்டத்துடன் அவரைத் தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டு வருகிறது.

Sehwag-and-Ashwin

ஆனால் இந்த சாதனைக்கும் திறமைக்கும் வெளிநாட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் அஸ்வின் கேப்டனாகவே இருந்திருப்பார் என்ற நிலைமையில் இந்தியாவில் இதுவரை துணை கேப்டன் பகுதியில் கூட பெற்றதில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மன்கட் அவுட் உட்பட கிரிக்கெட்டின் விதிமுறைகளை ஆழமாக பேசி களத்தில் தைரியமாக செயல்படக்கூடிய அஸ்வின் ஒரு சயின்டிஸ்ட் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டியதை அறிவோம்.

- Advertisement -

இருப்பினும் அதையே அடிப்படையாக வைத்து இந்திய அணி நிர்வாகம் உட்பட பலர் தம்மை “அதிகப்படியாக சிந்திக்கும் அதிமேதாவி” என்று மதிப்பிட்டு கேப்டனாக அதிக பிரசங்கித்தனமான முடிவை எடுத்து விடுவார் என்ற காரணத்தாலேயே புறக்கணிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் என்னை அதிகப்படியாக சிந்திப்பவர் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர். பொதுவாக தொடர்ந்து 15 – 20 போட்டிகளில் வாய்ப்பு பெறுபவர்கள் அதிகமாக சிந்திக்க மாட்டார்கள். மறுபுறம் ஓரிரு போட்டிகளில் மட்டும் வாய்ப்பு பெறும் என்னை போன்றவர் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகம் சிந்திக்க வேண்டியது என்னுடைய வேலையாகும்”

Ashwin

“இதுவே என்னுடைய பயணமாகும். இது எனக்கு பொருந்துகிறது. ஒருவேளை ஒருவர் என்னிடம் “நீங்கள் 15 போட்டிகள் தொடர்ந்து விளையாடப் போகிறீர்கள். நீங்கள் வீரர்களுக்கு பொறுப்பு. நீங்களே தலைமை பொறுப்பில் இருப்பீர்கள்” என்று சொன்னால் நான் ஏன் அதிகமாக சிந்திக்க வேண்டும். அத்துடன் ஒருவரை அதிகமாக சிந்திப்பவர் என்று சொல்வது நியாயமற்றதாகும். ஏனெனில் அது அவருடைய சொந்த பயணம் என்பதால் அதைப் பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை. மேலும் இந்தியா வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அணி வீரர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் முதலாவதாக இருப்பதில்லை”

இதையும் படிங்க:மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் ஜஸ்ப்ரீத் பும்ரா. எப்போது தெரியுமா? – ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி

“இது எனக்கு எதிராக வேலை செய்ய உருவாக்கப்பட்டது இல்லையா? இருப்பினும் என்னுடைய கேப்டன்ஷிப் பற்றி வெளியில் இருப்பவர்கள் நிறைய விமர்சனங்களை விடுவார்கள். எனவே இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் முதலாவதாக இருக்கிறதா இல்லையா என்பதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு நான் தகுதியாக இருந்தால் அங்கே என்னுடைய பெயர் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும் எதற்காக எந்த குறையும் சொல்ல விரும்பாத நான் பதிலடி கொடுப்பதற்கான நேரத்தையும் கொண்டிருக்கவில்லை. நான் யாருக்காகவும் எதற்காகவும் வருந்தவில்லை” என்று கூறினார்.

Advertisement