
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் சுமாராக விளையாடும் அவருக்கு முதலில் பிளேயிங் லெவனிலேயே வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சில ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்தார்கள்.
மேலும் அவரை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி துவக்க வீரராக அசத்தி வருகிறார். அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் தான் துவக்க வீரராக களமிறங்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது நியாயமற்றது என்று தெரிவித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக போட்டிருக்கலாம் என்று விமர்சித்தார். இந்நிலையில் சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக உருவாக்குவதற்காகவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த முடிவு சரியா அல்லது தவறா என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. கடந்த தொடரிலேயே துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த அவர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளிலும் அந்த பதவியை வகித்தார். நான் இப்படி சொல்வது தவறாக கூட இருக்கலாம். இது வருங்காலத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள முடிவு”
“அவர்கள் வருங்காலத்தில் யார் கேப்டனாக இருப்பார்கள் என்பதை பார்க்கிறார்கள். தற்போது டி20 அணிக்கு அக்சர் பட்டேல் துணை கேப்டனாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் ஒரே இடத்துக்காக ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலுக்கு இடையே போட்டி இருக்கிறது. ரிஷப் பண்ட் – கேஎல் ராகுல் ஆகியோருக்கு இடையேயும் விக்கெட் கீப்பர் இடத்திற்காக போட்டி நிலவுகிறது. எனவே பிளேயிங் லெவனில் 100% இடம் பிடிக்கப் போகும் ஒருவர் தான் துணை கேப்டனாக இருக்க முடியும்”
இதையும் படிங்க: அதுக்கு வருண் சக்ரவர்த்தி ஆடலாமே? எதுக்கு 3 டிஃபன்ஸ்.. அகர்கரின் பழைய தவறை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா
“தற்சமயத்தில் சீர்த்தன்மை நன்றாக இருக்கிறது. சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு சரியானவர் என்றால் அவர் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் மீதும் சாய்ந்து கொள்ளலாம். அவருக்கு ஆதரவு கொடுக்க இன்னும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார். மொத்தத்தில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால் சுப்மன் கில் தற்போது நன்றாக செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.