தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதில் கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடித்த அவர் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி 2017 வரை அனைத்து வகை அனைத்து கிரிக்கெட்டிலும் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டு வந்தார். ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஓரிரு போட்டிகளில் சுமாராக செயல்பட்ட அவரை தோனிக்கு பின் புதிய கேப்டனாக வந்த விராட் கோலி போதுமான ஆதரவு கொடுக்காமல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விட்டார்.
அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற நோக்கத்துடன் அவரை கழற்றி விட்ட விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி குல்தீப் யாதவை முதன்மை ஸ்பின்னராக உருவாக்க முயற்சித்தது. ஆனால் அவர் ஓரிரு வருடங்களுக்குப் பின் ஃபார்மை இழந்ததால் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கான இடத்தை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் ஐபிஎல் தொடரிலும் அசத்தி வந்த காரணத்தால் 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வாகி 2022 டி20 உலக கோப்பையிலும் விளையாடினார்.
வெளிநாட்டு வாய்ப்பு:
அதில் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவருக்கு வெளிநாடுகளில் இப்போதும் நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகிய புதிய கூட்டணி வந்தும் லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் 2018க்குப்பின் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கண்டாலும் தம்மை விட பேட்டிங்கில் அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரண்டராக இருப்பதால் தமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார். எனவே அதை புரிந்து கொள்ளாமல் அணியை எதிர்த்தால் அது முட்டாள்தனம் என்று தெரிவிக்கும் அவர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக ஆதரவு கொடுப்பது தமது கடமை என கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“இதற்கான விடையை நான் எவ்வாறு கண்டறிவது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதையும் எப்படி இது சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதையும் நான் யோசித்தால் அது என்னுடைய முட்டாள்தனமாகும். அப்படி யோசிப்பதற்கு பதிலாக எப்படி நான் 94 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்று விளையாடினேன்? என்று நினைத்து அதை செய்ததற்காக பெருமைப்பட வேண்டும். சமீப காலங்களாக நான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்கள் அதிர்ஷ்டவசமாகவோ துரதிஷ்டவசமாகவோ பேட்டிங் செய்பவர்களாக இருக்கிறோம்”
“அதில் ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்ம் சற்று மிகச் சிறப்பாக இருப்பதாலேயே முன்னுரிமையுடன் வாய்ப்பு பெறுகிறார். அதனால் நான் எதற்காக நீக்கப்பட்டேன் என்று யார் மீதும் குறை சொல்லி கை காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. மேலும் 2018 – 19 காலகட்டத்திற்கு பின் உடல் அளவிலும் மனதளங்களிலும் இது போன்ற தேவையற்ற விஷயங்களை பற்றி சிந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மாறாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எப்படி வெற்றியில் பங்காற்ற முடியும் என்று யோசிக்க விரும்புகிறேன்”
இதையும் படிங்க:முடிவுக்கு வந்த இந்திய வீரரின் உலககோப்பை கனவு. அணியில் இருந்து வெளியேற்ற திட்டம் – பி.சி.சி.ஐ அதிரடி
“ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஈகோவை கொண்டிருந்தால் நான் தான் நம்முடைய அணியின் மிகப்பெரிய வெள்ளை யானையாக இருப்பேன். ஆனால் அவ்வாறு நான் இருக்க விரும்பவில்லை. எனவே எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் வெற்றிக்காக விளையாடுவேன். இல்லையென்றால் இந்தியாவின் வெற்றிக்காக ஆதரவு கொடுப்பேன்” என்று கூறினார்.