
வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 144-6 என இந்தியா தடுமாறிய போது 113 ரன்கள் குவித்து காப்பாற்றிய அவர் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 38 வயதில் ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனையும் படைத்தார்.
அந்த வகையில் சிறப்பாக விளையாடும் அவர் ஓய்வு பெறுவதற்குள் அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையை உடைப்பாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் 2024 துலீப் கோப்பையில் அசத்திய இளம் ஆஃப் ஸ்பின்னர்கள் “இவர் எப்போது ஓய்வு பெறுவார் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே விளையாடுகிறார்கள்” என தம்முடைய மனைவி ப்ரீத்தி தெரிவித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
உண்மையில் தாமும் அது போல உணர ஆரம்பித்து விட்டதாக அஸ்வின் கூறியுள்ளார். எனவே இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நேற்று முன்தினம் துலீப் கோப்பையின் சில ஹைலைட் வீடியோக்களை பார்த்தோம். அப்போது இந்த ஆஃப் ஸ்பின்னர்கள் தங்களது மனதுக்குள் உங்களை திட்ட மாட்டார்களா? என்று என்னுடைய மனைவி சொன்னார்”
“கண்டிப்பாக அந்த இளம் வீரர்கள் அப்படி சிந்திப்பார்கள். குறிப்பாக எப்போது அஸ்வின் வெளியேறுவார் நமக்கு இடம் கிடைக்கும்? எப்போது இந்திய அணிக்குள் சென்று நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்? என்று அவர்கள் நினைப்பார்கள். உண்மையில் நானும் கொஞ்சம் அவ்வாறு உணர்கிறேன். ஆம் நான் அந்த இடத்தில் தான் இருக்கிறேன்”
“சொல்லப்போனால் இளம் வீரர்களாக இருந்த போது நாங்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று சிந்தித்திருக்கிறோம். அதை திரும்பிப் பார்க்கும் போது அது எனக்கு நிதர்சனத்தை காட்டுகிறது. நீங்கள் நிறைய வருடங்கள் விளையாடி விட்டீர்கள் என்பதை அது உணர்த்துகிறது. அப்போது ஜியோ சினிமா சேனலில் கிராபிக்ஸ் காட்டினார்கள்”
இதையும் படிங்க: ஹீரோ தோனியை முந்த முடியுமா.. கில்கிறிஸ்ட் மாதிரியான ரிஷப் பண்ட்க்கு அந்த வேலை இருக்கு.. இயன் ஸ்மித்
“அவர்களுடைய வயது குறைந்து இருக்கிறது. திடீரென என்னுடைய வயதை பார்க்கும் போது 38 ஆக உள்ளது. ரோகித் சர்மாவின் பிறந்த நாளன்று நாம் இருவரும் சில நாட்கள் ஒரே வயதுடன் இருப்போம் என்று அவரிடம் சொல்வேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்குகிறது.