- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ருதுராஜ் கைக்வாட் என்ன அடிச்சாலும் இந்திய அணியில் சான்ஸ் கிடைக்காது – உண்மையான காரணத்தை விளக்கும் அஷ்வின்

இந்தியாவில் நடைபெற்று வந்த உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையின் சாம்பியன் பட்டத்தை சௌராஷ்ட்ரா அணி வென்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய மகாராஷ்டிராவை பைனலில் எதிர்கொண்ட அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இந்த தொடர் முழுவதும் ரன் மெஷினை போல் அற்புதமாக செயல்பட்ட மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கைக்வாட் போராட்டம் வீணானது. ஏனெனில் இந்த தொடரில் 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் 660 ரன்களை 220.00 என்ற அபாரமான சராசரியில் விளாசி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.

குறிப்பாக அழுத்தம் வாய்ந்த நாக் அவுட் சுற்றில் காலிறுதியில் 220* ரன்கள், அரையிறுதியில் 168 ரன்கள், மாபெரும் பைனலில் 108 ரன்கள் குவித்த அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் 3 அடுத்தடுத்த நாக் அவுட் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன் உத்திரபிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் நோ-பால் உட்பட 7 சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்த அவர் கடைசி 10 விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் முறையே 136, 154*, 124, 21, 168, 124*, 40, 220*, 168, 108 என 8 சதங்களை அடித்துள்ளார்.

சான்ஸ் கிடைக்காது:

மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்படி ரன்கள் மேல் ரன்கள் சாதனை மேல் சாதனைகள் படைத்து கேப்டனாக தனது அணியை ஃபைனல் வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்ல முடியாத அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. அதே சமயம் இந்த தொடர்ச்சியான ஆட்டத்தால் தோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சென்னையின் கேப்டனாக ருதுராஜ் வரவேண்டும் என்று விரும்பும் சென்னை ரசிகர்கள் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனாலும் கடுமையான போட்டி நிறைந்த இந்திய அணியில் யாருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெறுவார் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் காரணமாகவே தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் யாருக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு பதில் என்பதை விட அவர் யாருடன் போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இவர்களுடன் ரிஷப் பண்ட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மேலும் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு மிகவும் கடினமான ஒரு நாடாகும்”

“அதாவது இங்கே ஒரு இடத்திற்கு அதிகப்படியான அனல் பறக்கும் போட்டி நிலவும். அந்த இடத்திற்கு ருத்ராஜ் போட்டி போடவில்லை. ஒரு சூரிய சக்தி மின்கலனையே தனது தலையில் கட்டிக்கொண்டு அசால்ட்டாக பெரிய ரன்களை குவித்து வருகிறார். அந்த வகையில் நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள் ருதுராஜ் கைக்வாட். அவரது செயல்பாடுகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விரைவில் உலக அரங்கில் ருதுராஜ் கைக்வாட் அனலை பறக்க விடுவதற்கு அதிக காலம் இல்லை” என்று கூறினார்.

அதாவது ரோஹித் முதல் சுப்மன் கில் வரை ஏற்கனவே இந்திய அணியில் நிறைய சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் இருப்பதால் தற்சமயத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்களை குவித்தாலும் ருதுராஜ் வாய்ப்பு பெறுவது கடினம் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கான காலம் விரைவில் காத்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக ஏற்கனவே இந்தியாவுக்காக 9 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியிருந்தால் தற்போது இந்திய அணியுடன் இணைந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -