21 தொடர்கள்.. முத்தையா முரளிதரனின் வாழ்நாள் உலக சாதனையை சமன் செய்த.. இந்தியாவின் நாயகன் அஸ்வின்

R ashwin
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை என்ற 2 – 0 கணக்கில் இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை போல் உங்களையும் வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்து அஸ்வின் முக்கிய பங்காற்றிய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதைத் தொடர்ந்து கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. குறிப்பாக 2, 3வது நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் அப்போட்டி டிராவில் முடிவடையும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி வங்கதேசத்தை 233, 146 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

இந்தியா வெற்றி:

மேலும் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக இந்தியா 285-9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் 95 ரன்கள் இலக்கை 3 விக்கெட்டுகள் இழந்து எட்டிப்பிடித்த இந்தியா மழையையும் தாண்டி அசாத்தியமான வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 மற்றும் 51, விராட் கோலி 47 மற்றும் 29, ராகுல் 68, கில் 39 ரன்கள் எடுத்தனர்.

பந்து வீச்சில் பும்ரா 6, அஸ்வின் 5, ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு மொத்தமாக 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் முழுவதும் முக்கிய பங்காற்றினார். ஆனால் இந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதையும் ரவிச்சந்திரன் அஸ்வின் தட்டிச் சென்றார்.

- Advertisement -

முரளிதரனுக்கு சமம்:

இதையும் சேர்த்து அஸ்வின் தனது கேரியரில் 11 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்நாள் உலக சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் 60 தொடர்களில் முரளிதரன் வென்ற 11 தொடர்நாயகன் விருதுகளை அஸ்வின் 21 தொடர்கள் குறைவாக வெறும் 39 தொடர்களிலேயே வென்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: அதுக்காகத் தான் சரவெடியா ஆடுனோம்.. ரோஹித் சொன்னதை செஞ்சது அபாரம்.. தொடர்நாயகன் அஸ்வின் பேட்டி

அவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் 9 தொடர்நாயகன் விருதுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். இது போக இந்திய அளவில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் அஸ்வின் யாராலும் எளிதில் தொட முடியாத உச்சத்தை தொட்டுள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின்: 11*
2. வீரேந்திர சேவாக்/சச்சின் டெண்டுல்கர்: தலா 5
3. ராகுல் ட்ராவிட்/அனில் கும்ப்ளே/ஹர்பஜன் சிங்/கபில் தேவ்: தலா 4

Advertisement