ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் டு பிளேஸிஸ் தலைமையிலான பெங்களூருவை பதம் பார்த்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. புனே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கடும் போராட்டத்திற்குப் பின் 144/8 ரன்களை சேர்த்தது. ஏனெனில் அந்த அணிக்கு அடுத்தடுத்த சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 8 (9) தேவதூத் படிக்கல் 7 (7) போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக கேப்டன் சாம்சன் அதிரடியாக 27 (21) ரன்களை சேர்த்து திடீரென அவுட்டாகி ஏமாற்றினார்.

அந்த நிலையில் டார்ல் மிட்சேல் 16 (24) சிம்ரோன் ஹெட்மயர் 3 (7) போன்ற அதிரடி காட்ட வேண்டிய வெளிநாட்டு வீரர்களும் பெங்களூருவின் அற்புதமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ராஜஸ்தான் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் நடுவரிசையில் களமிறங்கி கடைசி நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 56* (31) ரன்கள் விளாசி தனது அணியை காப்பாற்றினார். பெங்களூர் சார்பில் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அசத்திய அஷ்வின்:
அதை தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கடந்த போட்டிகளில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாகி மோசமான பார்மில் இருக்கும் விராட் கோலி இம்முறை ஓப்பனிங் வீரராக களமிறங்கினாலும் 9 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்த ஒருசில ஓவர்களில் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 23 (21) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தார். அப்போது 37/3 என ஆரம்பத்திலேயே சரிந்த பெங்களூருவை மேலும் மடக்கி பிடிக்கும் வகையில் அடுத்து வந்த ரஜத் படிடார் 16 (16), பிரபுதேசாய் 2 (7) ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் செய்த தமிழக வீரர் அஸ்வின் போட்டியை முழுமையாக ராஜஸ்தான் பக்கம் திருப்பினார்.

அந்த இக்கட்டான நிலைமையில் பெங்களூருவை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 6 (4) ரன்களில் ரன் அவுட்டாக மற்றொரு அதிரடி இளம் வீரர் சபாஷ் அகமதை அஸ்வின் 17 (27) ரன்களில் காலி செய்தார். இப்படி முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு பரிதாபமாக தோல்வி அடைந்து பங்கேற்ற 9 போட்டிகளில் 4-வது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
நம்பிக்கை நட்சத்திரம் அஷ்வின்:
இப்போட்டியில் 56* (31) ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரியான் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார். ஏனெனில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும் பிரஸித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் எடுக்க அவர்களைவிட துல்லியமாக பந்துவீசிய அஸ்வின் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை 4.25 என்ற இதர பவுலர்களை காட்டிலும் துல்லியமான எக்கனாமில் வீசினார். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் முதல் முறையாக ராஜஸ்தானுக்கு விளையாடும் அவரை அந்த அணி நிர்வாகம் மிகப்பெரிய அளவில் நம்புகிறது என்றே கூற வேண்டும்.

ஏனெனில் கணிசமாக மட்டுமே பேட்டிங் தெரிந்த அவரை நம்பி இந்த வருடம் முக்கியமான ஒருசில போட்டிகளில் நேரடியாக 3-வது இடத்திற்கு பேட்டிங் செய்ய அனுப்புகிறது. அதில் அவரும் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கிறார். நேற்றைய போட்டியில் கூட 3-வது இடத்தில் களமிறங்கிய அவர் 9 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 17 ரன்கள் எடுத்து தனக்கான வேலையை கச்சிதமாக செய்தார். ஒருவேளை தம்மால் அடிக்க முடியவில்லை என்றாலும் அதற்காக தயங்காமல் ரிட்டயர்டு அவுட்டாகி சென்று விடுபவராக உள்ளார்.
புதிய சாதனை:
முன்னதாக நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்று பியூஸ் சாவ்லாவின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 முதல் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், இந்தியாவுக்காக என இதுவரை மொத்தம் 271* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான் பவுலராக தன்னை நிரூபித்துள்ளார்.
அந்த பட்டியல் இதோ:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 271* விக்கெட்கள்
2. பியூஸ் சாவ்லா : 270 விக்கெட்கள்
2. யுஸ்வென்ற சஹால் : 265 விக்கெட்கள்
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் வெளிநாட்டு வீரராக மிக மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த மேக்ஸ்வெல் – ஆர்.சி.பி ராசியோ!
மேலும் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கடந்த அவர் மொத்தம் 152* விக்கெட்களுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் 6-ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.



