உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தும் சான்ஸை கோட்டை விட்றாதீங்க – சூர்யகுமாரை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி, காரணம் என்ன

- Advertisement -

நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இளம் இந்திய அணி அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் அதே மழைக்கு மத்தியில் சுமாராக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டி20 தொடரை வெல்வதற்கு மழை வழிவிட்ட 2வது போட்டியில் சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்று முக்கிய காரணமாக அமைந்தார்.

Suryakumar-Yadav

- Advertisement -

கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் கடந்த ஒன்றரை வருடங்களில் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை மிஞ்சி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து நிறைய வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். குறிப்பாக பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடித்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விடும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ஏபி டீ வில்லியர்ஸ் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

ஒன்டே தடுமாற்றம்:

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருப்பவராக அறியப்படும் சூரியகுமார் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 4, 34, 6 என சுமாராகவே செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதற்கு அவர் ஒன்றும் மெஷின் கிடையாது, இதர வீரர்கள் சொதப்பும் போது எல்லா போட்டிகளிலும் அவர் மட்டுமே எப்படி அடிக்க முடியும்? என்று சில ரசிகர்கள் கூறலாம். ஆனால் உண்மையாகவே அறிமுகமானது முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 15 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 384 ரன்களை 32.0 என்ற சுமாரான சராசரியில் எடுத்து வெறும் 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.

Suryakumar Yadav 1

ஆனால் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 2 சதங்களை அடித்து 44.0 என்ற சராசரியில் வெளுத்து வருகிறார். இதனால் பொறுமையுடன் விளையாடும் பக்குவம் இவரிடம் இல்லை என்பதால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று சில ரசிகர்கள் பேசத் துவங்கியுள்ளார்கள். இந்நிலையில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் சற்று முன்னேற்றத்தை கண்டால் மட்டுமே 4வது இடத்துக்கு நல்ல போட்டியை கொடுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு மத்தியில் 2023 உலகக் கோப்பையில் முதல் வீரராக தேர்வாக முடியும் என்று கூறியுள்ளார். அதற்கு டி20 போல அதிரடியாக இல்லாமல் சற்று பொறுமையாக விளையாடினாலே வெற்றி காண முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருநாள் போட்டிகள் என்பது டி20யை விட இரண்டரை மடங்கு அதிகம் மட்டுமே என்பதை சூரியகுமார் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே அவருக்கு எதிர்கொள்ள நிறைய பந்துகள் கிடைக்கும். அதனால் அவர் சற்று பொறுமையுடன் நின்று விளையாடி கடைசியில் வெளுக்க வேண்டும். அதற்கு முன்பாக நிறைய பந்துகளில் 30 – 40 ரன்களை அடிப்பதற்கான நேரம் அவருக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் சிறிது நீளமாக இருப்பதால் அதற்கேற்றார் போல் அவர் காத்திருந்து விளையாட வேண்டும். நீங்கள் உங்களது வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருந்தாலும் சூழ்நிலைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் மிகச்சிறந்த விளையாட்டு. இருப்பினும் அது உங்களுக்காக காத்திருக்காது”

Shastri

“அதற்கு ஆரம்பத்திலேயே நீங்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் விரைவிலேயே அல்லது கடைசியில் மதிப்பு கொடுத்தாக வேண்டும். இதற்காக பெரிய மாற்றங்கள் தேவையில்லை. போட்டியின் நீளம் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய பந்துகளில் அவர் தன்னுடைய மனநிலையை மாற்ற வேண்டும். இந்திய துணை கண்டத்தில் விளையாடும் போது 5வது இடத்தில் களமிறங்கி அவரால் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்பட முடியும். ஆனால் நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் நீங்கள் சற்று மாற்றங்களை செய்ய வேண்டும். எனவே தரமான வீரரான அவருக்கு இது போன்ற அம்சங்களை கற்றுக் கொண்டு விரைவில் முன்னேறுவது கடினமாக இருக்காது” என்று கூறினார்.

Advertisement