
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது டி20 உலக கோப்பை தொடரை வென்ற வேளையில் தற்போது நடப்பு சாம்பியனாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது. இம்முறையும் இந்திய அணி பலமான அணியாகவே இருப்பதால் கோப்பையை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
அதேவேளையில் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் கொஞ்சம் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த டி20 கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதினால் சுமை கொஞ்சம் குறைவுதான். அதே வேளையில் பல வீரர்கள் முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும். பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டெர்லிங் – விவரம் இதோ
ஆனாலும் டி20 போட்டிகளை பொருத்தவரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடுமாற்றம் ஏற்பட்டாலே போட்டியின் முடிவுகள் மாறும். எனவே அந்த அழுத்தமான நேரங்களை இந்திய அணி எவ்வாறு கையாள்கிறதோ அதை பொறுத்துதான் நமது வெற்றியும் இருக்கும். எனவே இந்த தொடரை சிறப்பாக துவங்க வேண்டியது அவசியம் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.