கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வினை அறிவித்தார். அதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக இளம் இடது கை ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவிற்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான துவக்கத்தை அளிக்கும் அவரது ஆட்டத்தை கணக்கில் கொண்டு அவருக்கு இந்திய அணியில் துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தது.
அபிஷேக் சர்மாவை பாராட்டிய : ரவி சாஸ்திரி
அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பற்றிக்கொண்ட அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்த அவர் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
அதனால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக அவரே இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 22 பந்துகளில் அரைசதம் கடந்ததோடு 84 ரன்கள் குவித்து அதிரடியில் அசத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரது அதிரடியான ஆட்டத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியதாவது : உலகில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் என்றால் அது அபிஷேக் சர்மா தான் அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஆட்டத்தை பார்த்தால் அவர் எப்படி ஒரு ஆட்டத்தை ஆடுகிறார் என்பது நமக்கு புரிந்திருக்கும்.
அவரிடம் மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை இருக்கிறது. அதனால் மிக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் அவர் விளையாடும் போது இன்னும் நம்பிக்கையை பெற்று ஆடுகிறார்.
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி இந்த விடயத்தில் ஒரு மெஜிசியன்.. முதல் டி20 போட்டிக்கு பின்னர் – சுனில் கவாஸ்கர் பாராட்டு
நிச்சயம் அபிஷேக் ஷர்மா மிகப்பெரிய நட்சத்திரமாக மாறுவார். இனி அவர் டி20 போட்டிகளில் ஆடுகிறார் என்று தெரிந்தால் நிச்சயம் ரசிகர்கள் டிவி ஆன் செய்து பார்ப்பீர்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் அதிரடியால் ரசிகர்களை மகிழ்விக்கிறார் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



