நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 84 ரன்களையும், ரிங்கு சிங் 44 ரன்களையும் குவித்து அசத்தினர்.
வருண் சக்கரவர்த்தி ஒரு மெஜிசியன் : சுனில் கவாஸ்கர்
பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சை பொறுத்தவரை ஒரு மெஜிசியன். ஏனெனில் அவர் இந்த போட்டியில் பவுண்டரிகளை எளிதாக விட்டுக் கொடுத்தாலும் முகத்தில் பதட்டத்தை காண்பிக்கவில்லை.
இதையும் படிங்க : எனக்கு எப்போ வாய்ப்பு கிடைச்சாலும் என்னோட வேலை இதுமட்டும் தான் – அர்ஷ்தீப் சிங் பேட்டி
அடுத்த ஓவரே வந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவிற்கு அவரிடம் நம்பிக்கை உள்ளது. அது அவரது உடல் மொழியில் தெரிகிறது. எனவே ஒரு ஓவரில் அவர் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் அடுத்த ஓவரிலேயே கம்பேக் கொடுக்கிறார். அதனால் தான் நான் அவரை பந்துவீச்சில் ஒரு மெஜிசியன் என்று கூறுகிறேன் என சுனில் கவாஸ்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



