இனியாச்சும் அந்த சாக்கு சொல்லாம.. இந்திய துணைக் கண்டத்துக்கு மதிப்பு கொடுங்க.. இங்கிலாந்தை சாடிய சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் நடைபெற்ற 8வது போட்டியில் வலுவான இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் 350க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இங்கிலாந்து அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக தோற்றது. தற்போது சிறிய அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து தோற்றது. இந்த அடுத்தடுத்த தோல்விகளால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

- Advertisement -

துணை கண்டம்ன்னா துச்சமா:

முன்னதாக வெளிநாட்டு அணியான இங்கிலாந்து இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் நாடுகளை துச்சமாக எண்ணி வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக சமீபத்தில் இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து விளையாடியது. அதில் முதல் 2 போட்டிகளில் தோற்ற போது 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தாலும் கவலைப்பட மாட்டோம் என்று இங்கிலாந்து துவக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்தார்.

ஏனெனில் சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவையே தோற்கடிக்கும் அளவுக்கு தங்களிடம் திறமை இருப்பதாக அவர் தெரிவித்தார். கடைசியில் அவர் கேட்டது போலவே 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு ஒயிட் வாஸ் தோல்வியை இந்தியா பார்சல் கட்டியது. அந்தத் தோல்விக்கு முதல் போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியினர் பயிற்சி எடுக்காதததே காரணம் என்று கெவின் பீட்டர்சன், ரவி சாஸ்திரி ஆகியோர் விமர்சனம் செய்தனர்.

- Advertisement -

இனிமேலாவது மதிங்க:

அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு அருகில் உள்ள பாகிஸ்தானிலும் சிறப்பாக விளையாடாத இங்கிலாந்து சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஏற்கனவே 2023 உலகக் கோப்பையிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் அந்த அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இனிமேலாவது இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்த நாடுகளை துச்சமாக நினைத்து சாக்கு சொல்லாமல் முறையான பயிற்சிகளை எடுத்து நன்றாக விளையாடுங்கள் என்று இங்கிலாந்தை ரவி சாஸ்திரி சாடியுள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி தொடரில் பாண்டிங்கிற்கு நிகராக ரோஹித் சர்மா.. தோனி செய்யாத சாதனை.. சச்சினையும் முந்தி சாதனை

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தான் நீங்கள் அசத்தி விட்டீர்கள். இங்கிலாந்தைப் பொறுத்த வரை துணைக் கண்டத்தில் விளையாடும் போது சாக்கு சொல்லாமல் சீரியஸாக எடுத்துக்கொண்டு விளையாடுங்கள். அப்போது தான் நீங்கள் எங்கள் துணை கண்டத்தில் பயணிக்கும் வெளிநாட்டு அணியாக மதிக்கப்படுவீர்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement