இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றிகளைப் பெற்று சூப்பர்8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்பதனாலும் சர்வதேச டி20 போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியானது இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த : ரவி சாஸ்திரி
அந்த வகையிலேயே இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருவதால் இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெறும் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா இந்த தொடரில் இதுவரை தனது ரன் கணக்கை துவங்காதது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் கடந்த ஓராண்டாகவே சர்வதேச டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அபிஷேக் ஷர்மா இருந்து வருகிறார். இதன் காரணமாக இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் மோசமான சரிவை அபிஷேக் சர்மா சந்தித்துள்ளார். இதன் காரணமாக அபிஷேக் சர்மா வெளியேற்றப்பட்டு சஞ்சு சாம்சன் வரவேண்டும் என்ற விவாதங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும் நிர்வாகம் அபிஷேக் சர்மாவின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவரே சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் இந்த பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி கூறுகையில் : அபிஷேக் சர்மா மூன்று போட்டிகளில் டக் அவுட்டானதை நான் ஒரு நேர்மறையாகவே பார்க்கிறேன்.
ஏனெனில் ஒரு சில வீரர்கள் முக்கிய போட்டிகளுக்காக தனது சிறந்த ஆட்டத்தை சேமித்து வைத்திருப்பார்கள். அந்த வகையிலே அபிஷேக் ஷர்மா எதிர்வரும் முக்கிய ஆட்டங்களுக்காக தனது ஆட்டத்தை சேமித்து வைத்திருக்கிறார் என்று நான் இந்த நிகழ்வை எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி ஒவ்வொரு போட்டியிலுமே இந்திய அணி வெற்றி பெற்ற போது ஒவ்வொரு வீரர்கள் வெற்றி காரணமாக திகழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : திலக் வர்மா ஸ்லோவா ஆடுறாருனு நீங்க சொல்றது உண்மைதான்.. ஆனா – சூரியகுமார் யாதவ் பேச்சு
அந்தவகையில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக விளையாடினர். இது இந்திய அணிக்கு பலம் தான். எதிர்வரும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நிச்சயம் அபிஷேக் சர்மா அசத்துவார் என்று தான் உறுதியாக நம்புவதாக ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



