நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் இரண்டாவது போட்டி துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கான்வே 76, ரவீந்திரா 65 ரன்கள் எடுத்த உதவியுடன் 259 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு அஸ்வின் 3, வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து வெறும் 156 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 198-5 ரன்கள் எடுத்து மொத்தமாக 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
சுமாரான கேப்டன்ஷிப்:
அதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பிட்ச்சை தவறாக படித்து முதலில் பேட்டிங் செய்தது 46க்கு ஆல் அவுட்டாகி இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது. அந்த நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து பேட்டிங் செய்த போது சுமாரான ஃபீல்டிங்கை அமைத்தார்.
குறிப்பாக அஸ்வின், சுந்தர் ஆகியோர் பந்து வீசுகையில் அவர்களுக்கு விக்கெட்டுகளை எடுப்பதற்காக நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை சுற்றி அவர் நிறைய ஃபீல்டர்களை நிறுத்தவில்லை. மாறாக முதல் ஸ்லிப் பகுதியில் நின்ற ரோகித் மற்ற அனைவரையும் சிங்கிள் எடுப்பதை தவிர்ப்பதற்காக பரவலாக நிறுத்தினார். அது பற்றி முன்னாள் வீரர் முரளி கார்த்திக் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு.
ரவி சாஸ்திரி விமர்சனம்:
“நியூசிலாந்து சிங்கிள் எடுக்க முயற்சிக்கும் போது தங்களை சுற்றியிருந்த இந்திய வீரர்களை சிதறடிக்க செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே ரோகித் சர்மா மட்டுமே ஸ்லிப் பகுதியில் இருக்கிறார். மற்றவர்கள் சிங்களை தடுக்க முயற்சிக்கின்றனர்” என்று கூறினார். அது பற்றி ரவி சாஸ்திரி விமர்சித்தது பின்வருமாறு. “இது நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதையும் சொல்கிறது”
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார்ன்னு நினச்சுகிட்டு அதை ஒதுக்கியதே.. விராட் கோலி இப்படி திண்டாட காரணம்.. கும்ப்ளே விமர்சனம்
“இங்கே நியூசிலாந்தை 120க்கு எப்படி அவுட்டாக்கலாம் என்று இந்தியா சிந்திக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் அவர்களை அட்டாக் செய்யக்கூடிய இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும். ஆம் அவர்கள் 60-0 என்ற வலுவான நிலையில் உள்ளனர். அப்போது கேப்டனாக நீங்கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டுமே தவிர இப்படி ஃபீல்டர்களை பரவலாக நிறுத்தக்கூடாது” என்று கூறினார்.



