2018, 2021லயே இந்தியா ஜெயிச்சுருக்கும்.. ஆனா இவர் தடுத்துட்டாரு.. முன்னாள் தெ.ஆ வீரர் மீது சாஸ்திரி ஆதங்கம்

Vernon Philander
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வீசும் நிகழ்வை நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் மற்றும் காந்த குரல் வர்ணனையாளரான ரவி சாஸ்திரி தொகுத்து வழங்கினார். அதற்கு முன்பாக பிட்ச் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நேரடியாக களத்தில் இருந்து ரிப்போர்ட் வழங்கிய அவருடைய அருகில் மற்றொரு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் வெர்னோன் ஃபிலாண்டர் இருந்தார்.

- Advertisement -

பறிபோன வெற்றி:
அப்போது தாம் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வெல்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை ஃபிலாண்டர் தடுத்ததாக ரவி சாஸ்திரி வெளிப்படையாக பேசினார். ஆனால் இம்முறை ஃபிலாண்டர் ஓய்வு பெற்று விட்டதால் தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா வெல்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த ரவி சாஸ்திரி இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பேசியது பின்வருமாறு.

“இம்முறை இந்தியா வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது ஏன் தெரியுமா? ஏனெனில் இவர் (ஃபிலாண்டர்) தற்போது விளையாடவில்லை. நாங்கள் கடைசியாக வந்த 2 முறையும் தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் இவர் குறுக்கே இருந்தார். நாம் ரபாடா மற்றும் லுங்கி நிகிடி ஆகியோருடைய புள்ளிவிவரங்களை பற்றி பார்க்கிறோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக இவருடைய புள்ளிவிவரங்களை நீங்கள் பாருங்கள்”

- Advertisement -

“நாங்கள் விக்கெட்கள் இழக்க விரும்பாத சமயத்தில் அவர் எப்போதுமே முக்கிய விக்கெட்டுகளை எடுத்துள்ளார்” என்று கூறினார். அதாவது 2018/19, 2021/22 வருடங்களில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா முடிந்தளவுக்கு போராடியும் தலா 2 – 1 (3) என்ற கணக்கில் 2 முறை தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: முதல் டெஸ்டில் ஜடேஜா விலகியது ஏன்? பிசிசிஐ அறிவிப்பால் கிடைத்த அதிர்ஷ்டத்தில் வரலாறு படைப்பாரா அஸ்வின்

அந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடிய ஃபிலாண்டர் 25 விக்கெட்டுகளை 18 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே அவர் இருந்ததாக ரவி சாஸ்திரி ஆதங்கத்துடன் நேரலையில் பாராட்டினார். இருப்பினும் தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டதால் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement