
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011இல் அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9270 ரன்களை அடுத்து 30 சதங்கள் விளாசி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் சமீபத்திய போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய அவரையும் ரோஹித் சர்மாவையும் பிசிசிஐ அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட முடிவெடுத்தது.
அதற்கு முன்பாக அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த ஓய்வு காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்து வரலாற்று சாதனையைப் படைக்கும் பொன்னான வாய்ப்பை விராட் கோலி 770 ரன்னில் தவற விட்டார். இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றது தமக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஏனெனில் மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் 2 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்த்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அண்டர்-19 உலகக் கோப்பை முதல் சாம்பியன்ஸ் டிராபி வரை இந்தியாவுக்காக அனைத்து கோப்பைகளையும் விராட் கோலி வென்றுள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். எனவே 10000 ரன்கள் சாதனை தவறியதற்காக அவர் எப்போதும் கவலைப்பட மாட்டார் என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஓய்வுக்கான காரணம் பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி என்னை ஆச்சரியப்படுத்தினார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது இன்னும் 2 – 3 வருடங்கள் விளையாடுவதற்கான திறமையும் தகுதியும் அவரிடம் இருப்பதாக நான் கருதினேன். ஆனால் மனதளவில் வறுபட்ட நீங்கள் அதிகமாக சமைக்கப்பட்டது போல உணர்வீர்கள்”
“அப்போது இனிமேலும் விளையாட முடியாது என்று உடல் சொல்லும். நீங்கள் பார்ப்பதற்கு உடலளவில் ஃபிட்டாக தெரியலாம். அணியில் இருக்கும் நிறைய வீரர்களை விட நீங்கள் ஃபிட்னஸ் லெவலில் அதிகமாக இருப்பதாக தெரியும். ஆனால் நீங்கள் மனதளவில் சோர்வடைந்திருக்கும் போது இனிமேலும் விளையாட முடியாது என்ற செய்தியை மனம் உங்களுடைய உடலுக்கு அனுப்பும்”
இதையும் படிங்க: விராட் கோலியிடம் பேசி ரிட்டையராக வேணாம்ன்னு சொன்னேன்.. இதனால கிளம்புறேன்னு சொல்லிட்டாரு.. சாஸ்திரி
“அதுவே நீங்கள் ஓய்வு பெறுவதற்கான நேரமாகும். இது போன்ற நேரங்களில் நீங்கள் ஓய்வு பெற்ற பின் சில மாதங்கள் கழித்து அந்த சாதனையை செய்திருக்கலாம், இந்த வெற்றியைப் பெற்றிருக்கலாம் என்று விரும்புவீர்கள். ஆனால் விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக இருந்துள்ளார். உலகக் கோப்பைகளை வென்றுள்ளார். அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக தாமே வென்றுள்ளார். அந்த வகையில் அனைத்தையும் சாதித்துள்ள அவர் இனிமேல் சாதிக்க ஒன்றுமில்லை” என்று கூறினார்.