இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நம்பிக்கை நாயகன் விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்த அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த அவர் கேப்டனாக 40 வெற்றிகளை பதிவு செய்தார்.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக விராட் கோலி சாதனை படைத்தார். அவருடைய தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. அப்படிப்பட்ட அவர் சமீப காலங்களில் பெரிய ரன்கள் அடிக்கத் தவறினார்.
கேப்டனாக போட்ருப்பேன்:
அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தாமாக இருந்திருந்தால் விராட் கோலியை ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல், 2025 சாம்பியன்ஸ் டிராபி செமி ஃபைனலில் இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல விராட் கோலி அழுத்தமான பெரிய போட்டிகளில் அசத்தக்கூடியவர் என்று சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேரலை வருடங்களில் அவர் பேசியது பின்வருமாறு.
சாஸ்திரி ஆதங்கம்:
“விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது சோகமானது. ஏனெனில் அவர் மகத்தான பிளேயர் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் விடைபெறும் போது தான் எவ்வளவு பெரிய வீரராக இருந்தீர்கள் என்பதை மக்கள் உண்மையாக உணர்வார்கள். புள்ளிவிவரங்கள் நியாயமான சூழ்நிலையைச் சொல்லாது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அதுவும் வெளிநாடுகளில் முன்னோக்கி எடுத்துச் சென்ற விதம் அற்புதமானது”
இதையும் படிங்க: 591 ரன்ஸ்.. லார்ட்ஸ் மெக்காவின் நாயகனாக.. சோபர்ஸ், சச்சினை முந்தி ஸ்மித் உலக சாதனை
“கடந்த முறை லார்ட்ஸ் மைதானத்தில் அவர் கேப்டனாக செயல்பட்டு விஷயங்களை மாற்றிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். திடீரென விராட் கோலி விடைபெற்ற விதம் எனக்கு சோகத்தைக் கொடுத்தது. இன்னும் அதிக தொடர்புடன் அவரை சிறப்பாக கையாண்டிருக்கலாம். என்னால் ஏதாவது செய்ய முடிந்திருக்குமேயானால் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் அவரை நேரடியாக கேப்டனாக நியமித்திருப்பேன்” என்று சொல்லி பிசிசிஐ’ஐ சாடினார்.



