இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை சந்திக்க அவரது சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக விராட் கோலி ஓய்வு பெற வேண்டுமென்று சில இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், ப்ரைன் லாரா போல இப்போதும் இந்திய இளம் வீரர்களுக்கு விராட் கோலியால் உதவ முடியும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் தற்போதைய நிலை என்னை சச்சின் மற்றும் பிரைன் லாராவை நோக்கி அழைத்துச் செல்கிறது. விராட் கோலியிடம் அசத்துவதற்கு இன்னும் சில வருடங்கள் இருக்கிறது”
லாரா, சச்சின் மாதிரி:
“அதில் உள்ளே வரும் இளம் வீரர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுடைய அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஃபார்ம் நன்றாக இருந்தால் மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்து விட்டது. அதை உங்களுடைய மனம் உங்களுக்கு சொல்லும். இந்த விஷயம் தான் சச்சின் டெண்டுல்கர் நடந்தது”
“சச்சின் டெண்டுல்கரின் கடைசி கட்ட வருடங்களை நீங்கள் பார்க்கும் போது அவர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால் முடிந்தளவுக்கு தன்னுடைய பங்களிப்பை அணிக்கு கொடுத்த அவர் போதுமான அளவுக்கு நன்றாக விளையாடினார். இந்திய அணியும் தற்போது இளம் வீரர்களை நோக்கி நகர்ந்து வருகிறது”
அனுபவம் உதவும்:
“ஜெய்ஸ்வால் 23 வயதாகிறார். சுப்மன் கில் 25. நித்திஷ் ரெட்டி 21. ரிஷப் பண்ட் இன்னும் 25 – 27 வயதில் இருக்கிறார். எனவே விராட் கோலி போன்ற தரத்தை கொண்டவரிடம் அது போன்ற நிறைய இளம் வீரர்கள் அனுபவத்தை கற்றுக் கொண்டு பயன் பெற முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி இப்போதும் நல்ல ஃபிட்னஸ் கடைபிடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆல்ரெடி ஆஸியில் இந்தியா செஞ்ச உலக சாதனையை மறக்காதீங்க.. கம்பேக் உறுதி.. ரசிகர்களுக்கு யுவி மெசேஜ்
எனவே அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அங்கே ஜெயிஸ்வால் போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக விளையாட உள்ளனர். அங்கே விராட் கோலியின் அனுபவம் இளம் வீரர்களுக்கு உதவும் என்று சொல்லலாம். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய கதையை 2023 ஆசிய கோப்பையில் உடைத்தது போல விரைவில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த வாய்ப்புள்ளது.



