இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2011இல் அறிமுகமாகி 123 போட்டிகளில் விளையாடிய அவர் 30 சதங்கள் அடித்து 9230 ரன்களை குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். முன்னதாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அஞ்சாமல் அவர்களுக்கு திருப்பி பதிலடி கொடுப்பதில் விராட் கோலி வல்லவராக அறியப்படுகிறார்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2014 ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் போட்டியில் மிட்சேல் ஜான்ஷன் அதிவேகமான பந்தை வீசி விராட் கோலியின் ஹெல்மெட்டில் அடித்தார். அதனால் கீழே விழுந்த விராட் கோலி அதற்காக அசராமல் விளையாடினார். நேரம் செல்ல செல்ல ஜான்சனை பவுண்டரிகளாக தெறிக்க விட்ட விராட் கோலி சதத்தை அடித்து காற்றில் முத்தத்தை பறக்க விட்டு பதிலடி கொடுத்தார்.
ஜான்சனுக்கு பதிலடி:
இறுதியில் 169 ரன்களை அடித்த விராட் கோலி தம்முடைய பேட்டில் முத்தமிட்டு ஜான்சனுக்கு பதிலடி கொடுத்துச் சென்றார். இந்நிலையில் அதுவே ஜான்சன் போன்ற ஆஸ்திரேலியர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுக்கத் துவங்கிய தருணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டு 19 வயதில் உலகிலேயே மிகவும் சவாலான பெர்த் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அதே போல 2018ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்து அந்நாட்டில் இந்தியாவின் முதல் வெற்றியை பெறுவதற்கு வித்திட்டதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மிட்சேல் ஜான்சனுடன் அவருடைய வாய்மொழி சண்டையை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவர் அந்த ஆஸ்திரேலியருக்கு உணவே இடைவெளியின் போது தொடர்ந்து ஊசி ஏற்றிக் கொண்டிருந்தார்”
தரமான சதம்:
“அந்த இருவருமே சண்டையிட துவங்கினார்கள். அந்த சண்டையில் விராட் கோலி தன்னுடைய மூர்க்கத்தனத்தால் ஜான்சனுக்கு வலுவான மெசேஜ் கொடுத்ததை நான் பார்த்தேன். அங்கே சண்டை துவங்கியது. கடைசியில் விராட் கோலி 169 ரன்கள் அடித்து நொறுக்கினார். பின்னர் பெர்த் மைதானத்தில் பந்துகள் பறந்த சூழ்நிலையில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது விராட் கோலி ஆஸ்திரேலிய பவுலர்களை கிழித்தார்”
இதையும் படிங்க: 27 கோடி கொடுத்து வாங்குனதுக்கு நல்லா செஞ்சிட்ட.. ரிஷப் பண்ட்டை பார்த்து லக்னோ ஓனர் செய்த செயல்
“1992இல் சச்சின் டெண்டுல்கரும் பெர்த் மைதானத்தில் சதத்தை அடித்தார். ஆனால் அப்போது சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தன” என்று கூறினார். மொத்தத்தில் கடைசி சில வருடங்களில் தடுமாறினாலும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராகவே பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.



