ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த வருடம் இளம் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை 27 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ வாங்கியது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையைப் படைத்த அவரை லக்னோ நிர்வாகம் தங்களுடைய கேப்டனாகவும் நியமித்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சி மேட்ச் வின்னராக இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் ரிஷப் பண்ட் டி20 போட்டிகளில் எப்போதுமே தொடர்ச்சியாக அசத்தியதில்லை. இருப்பினும் தற்போது அனுபவத்தால் அவர் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் லக்னோ நிர்வாகம் பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாக நியமித்தது. ஆனால் அந்த வாய்ப்பில் ஆரம்பத்திலேயே டெல்லிக்கு எதிரான போட்டியில் மோகித் சர்மாவின் ஸ்டம்பிங்கை தவற விட்ட ரிஷப் பண்ட் லக்னோ தோல்விக்கு காரணமானார்.
சொதப்பிய பண்ட்:
அதை விட பேட்டிங் துறையில் ஆரம்பம் முதலே அவர் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிராக 63 ரன்கள் அடித்த அவர் மற்றும் அனைத்து போட்டிகளிலும் 20 ரன்களை தாண்டுவதற்கே திண்டாடினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மே 19ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்வதற்கான அரைகுறை வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலையில் லக்னோ களமிறங்கியது.
ஆனால் அந்தப் போட்டியிலும் ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்த ரிஷப் பண்ட் 7 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். மறுபுறம் வாழ்வா – சாவா போட்டியிலாவது ரிஷப் பண்ட் அசத்துவார் என்ற ஆர்வத்துடன் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பால்கனியில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். இருப்பினும் கடைசியில் ரிசப் பண்ட் ஏமாற்றத்தையே கொடுத்தார்.
ஓனர் ஏமாற்றம்:
அதனால் ரிஷப் பண்ட் அவுட்டானதும் “உன்னை 27 கோடி கொடுத்து வாங்கியதற்கு நன்றாக செய்து விட்டாய்” என்ற வகையிலான சோகமான ரியாக்சனுடன் சஞ்சீவ் கோயங்கா பால்கனியை விட்டு வெளியேறி உள்ளே சென்றார். இறுதியில் போட்டியின் முடிவில் லக்னோ தோல்வியை சந்திக்க 10 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்காததே காரணம் என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லக்னோ அணியை வீழ்த்தி பெற்ற அசத்தலான வெற்றிக்கு காரணமே இவர்தான் – பேட் கம்மின்ஸ் பாராட்டு
இருப்பினும் அந்த 10 ரன்களை தாம் எடுக்காததே தோல்விக்கு காரணமானதாக அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மொத்தத்தில் இந்த வருடம் 12 போட்டிகளில் ரிஷப் பண்ட் 135 ரன்களை 12.27 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் மிகவும் குறைவான சராசரியில் பேட்டிங் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.



