
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் நான்காவது போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியா மிகவும் போராடி 369 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 114, ஜெய்ஸ்வால் 82, சுந்தர் 50 ரன்கள் எடுத்தனர். அதன் பின் விளையாடும் ஆஸ்திரேலியா நான்காவது நாள் முடிவில் 228-9 ரன்கள் எடுத்துள்ளது. தற்சமயத்தில் 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக அப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 99-6 என மடக்கிய இந்தியா விரைவில் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கமின்ஸ் 41 ரன்கள் அடித்து சவாலை கொடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் லயன் 41*, போலண்ட் 10* ரன்கள் எடுத்து இன்னும் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்து வருகிறார்கள்.
ஒருவேளை அந்த ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் இந்தியா இந்நேரம் சேசிங்கை துவங்கி வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கும் என்றே சொல்லலாம். அதனால் 5வது நாளில் 333+ ரன்கள் இலக்கை இந்தியா துரத்துவது கடினம் என்பதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் அது இந்திய அணிக்கு வரவேற்கத்தக்க விஷயம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “4வது நாள் மாலையில் இந்தியா பேட்டிங் செய்யாததற்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனெனில் நாள் முழுவதும் ஃபீல்டிங் செய்து விட்டு நீங்கள் கடைசி 20 நிமிடங்கள் 3 – 4 ஓவர்களை எதிர்கொள்வது வித்தியாசமான கடினமான ஒன்றாகும். ஆனால் நாளை புத்துணர்ச்சியுடன் வரும் போது சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். அப்போது சேசிங் செய்ய செல்லலாமா அல்லது போட்டியை டிரா செய்யலாமா என்பது உங்களுக்கு தெளிவாக தெரிய வரும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: எங்களை திருத்திக்கிட்டு இதை செஞ்சா போதும்.. இந்தியாவால் ஜெய்க்க முடியும்.. அப்பாவின் தியாகம் பற்றியும் நிதிஷ் பேட்டி
இது பற்றி மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “இங்கே நீங்கள் உளவியல் ரீதியாக பார்க்க வேண்டும். சுமாரான ஃபார்மில் உள்ள ரோஹித் சர்மா அழுத்தத்தில் இருக்கிறார். 3 கேட்ச்களை விட்டதால் ஜெய்ஸ்வால் ஏமாற்றத்துடன் இருப்பார். எனவே அவற்றைக் கடந்து கடைசி நாளில் அவர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாட இது உதவும்” என்று கூறினார். குறிப்பாக சுமாராக பார்மில் உள்ள ரோஹித் 4வது நாள் விளையாடிருந்தால் விக்கெட்டை விட்டிருக்க வேண்டியது தவிர்க்கப்பட்டுள்ளதாக வாகன் கூறியுள்ளார்.