
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். முன்னதாக இந்திய கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மறுபுறம் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இருந்த இந்தியா தொடரை சமன் செய்ய கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அப்போது மோசமான ஃபார்மில் இருந்த ரோஹித் சர்மா தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொண்ட முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்தார். அணியின் நலனுக்காக அவர் எடுத்த முடிவு பாராட்டப்பட்டது. ஆனாலும் ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா போராடாமலேயே தோற்றது.
இந்நிலையில் அத்தொடரில் தாம் பயிற்சியாளராக இருந்திருந்தால் சிட்னியில் நடந்த கடைசிப் போட்டியில் கௌதம் கம்பீர் போல ரோஹித்தை விளையாட வைக்காமல் இருந்திருக்க மாட்டேன் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் வேகத்துக்கு சாதகமாக இருந்த அந்த பிட்ச்சில் ரோஹித் போன்றவர் அதிரடியாக 30 – 40 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி தலைகீழாக மாறியிருக்கும் என்றும் ரவி சாஸ்திரி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை டாஸ் வீசும் நிகழ்வின் போது பார்த்தேன். பொதுவாக அந்த நிலையில் பேசுவதற்கு அதிக நேரம் கிடைக்காது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவிடம் பேசினேன். அப்போது நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் கடைசிப் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்று அவரிடம் சொன்னேன்”
“ஏனெனில் அப்போது தொடர் முடியவில்லை. 2 – 1 என்ற கணக்கில் பாதியில் நிற்கும் போது ஒருவரை தூக்கி எறியக்கூடிய பயிற்சியாளர் நான் கிடையாது. அது நீங்கள் அணியை விட்டுச் செல்லக்கூடிய சூழ்நிலையும் கிடையாது. அது 20 – 40 ரன்கள் வித்யாசத்தில் நின்ற போட்டியாக இருந்தது. அதைத்தான் ரோஹித் சர்மாவிடம் சொன்னேன். சிட்னியில் அப்படிப்பட்ட பிட்ச் இருந்தது. ரோகித் எந்த ஃபார்மில் இருந்திருந்தாலும் அவர் ஒரு மேட்ச் வின்னர்”
இதையும் படிங்க: இந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் ஒரு டிராவிட், ஒரு கங்குலி கிடைக்கபோவது உறுதி – பிரவீன் ஆம்ரே
“அந்த சூழ்நிலையில் அவர் 30 – 40 ரன்களை அதிரடியாக எடுத்திருந்தால் நிலைமை மாறி தொடர் சமமாக முடிந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உங்களுடைய ஸ்டைல். மற்றொருவர் (கம்பீர்) வேறு ஸ்டைலைக் கொண்டிருப்பார். இதுவே எனது ஸ்டைலாக இருக்கும் என்று ரோஹித்திடம் சொன்னேன். அதை நீண்ட நேரம் இதயத்தில் வைத்திருந்த நான் ஐபிஎல் தொடரில் ரோஹித்திடம் சொன்னேன்” என்று கூறினார்.