ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த ஜஸ்ப்ரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் காயத்தை பொறுத்து தான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ராவின் பெயர் சத்தம் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.
விலகும் பும்ரா:
அதனால் அவருடைய காயம் இன்னும் குணமடையாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் பும்ரா விளையாட மாட்டார் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் பும்ரா விலகினால் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும் வாய்ப்பு வெறும் 30 – 35 சதவீதமாக குறைந்து விடும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக 2022 அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவை இந்திய அணி அவசரமாக களமிறக்கியது. அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே காயமடைந்த பும்ரா மீண்டும் குணமடைய 10 மாதங்கள் எடுத்துக் கொண்டார். எனவே இம்முறை பும்ரா விஷயத்தில் அது போன்ற தவறை இந்தியா செய்யக்கூடாது என்று சாஸ்திரி கேட்டுக்கொண்டார்.
2022 தவறு வேண்டாம்:
இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது பெரிய ரிஸ்க் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு அடுத்ததாக நிறைய பெரிய போட்டிகள் வரவிருக்கிறது. கேரியரின் இந்தக் கட்டத்தில் ஒரு ஆட்டத்திற்கு அழைக்கப்பட்டு பவுலிங் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பும்ரா மிகவும் விலைமதிப்பற்றவராக இருக்கிறார். இந்தியாவில் எப்போதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்”
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை காலி செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ
“அவர்கள் பும்ரா நேரடியாக வந்து தெறிக்க விடுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் காயத்திலிருந்து நீங்கள் வந்து விளையாடும் போது அது எளிதல்ல. பும்ரா ஃபிட்டாக இல்லாமல் போனால் சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு 30 – 35 சதவீதமாக குறைந்து போய்விடும். அவர் முழுமையாக விளையாடினால் டெத் ஓவர்களில் உங்களுக்கு உறுதியாக கட்டுப்பாடு கிடைக்கும். அவர் விளையாடுவதே முற்றிலும் வித்தியாசமான போட்டியை கொடுக்கும்” என்று கூறினார்.