
ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் துவங்கும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா 3வது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா அடுத்தடுத்து வென்றது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்தனர். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் சில பிரச்சனைகள் இருப்பதால் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா மீண்டும் வெல்லும் என்று சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஷமி, பும்ரா, சிராஜ், அஸ்வின் போன்ற இந்திய பவுலர்கள் ஃபிட்டாக இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் அனுபவம் மற்றும் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதால் நிலையான ஓப்பனிங் ஜோடி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே அதைப் பயன்படுத்தினால் இம்முறையும் இந்தியா தொடரை வெல்லலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவில் வென்ற 2018 – 19, 2020 – 21 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் உலகக் கோப்பைக்கு நிகரான 24 கேரட் தங்கம் போன்ற வெற்றிகள் என்றும் ரவி சாஸ்திரி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நம்முடைய பவுலர்கள் ஃபிட்டாக உள்ளனர். அது ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும்”
“ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை ஒரு காலத்தில் இருந்தது போல் தற்போது வலுவாக இல்லை. அவர்கள் அணியில் சில வீரர்கள் ஓய்வு பெற்றனர் அல்லது சில வீரர்கள் தங்களது கேரியரின் முடிவில் இருக்கின்றனர். அதே சமயம் பெரும்பாலான வீரர்கள் செட்டிலாகியுள்ளனர். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது”
இதையும் படிங்க: நான் சேர்ந்து விளையாடியதிலேயே பெஸ்ட் பிளேயர்னா அது இவர்தான் – தந்து விருப்பத்தை தெரிவித்த ரவிச்சந்திரன் அஷ்வின்
“ஆனால் ஆஸ்திரேலியா கடுமையாக போட்டியிடும். அதில் எந்த கேள்வியும் இல்லை. பார்டர் – கவாஸ்கர் கோப்பை உலகக் கோப்பையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கோப்பைகளை ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக வென்றது எனது கேரியரின் மிகப்பெரிய தருணமாகும். நான் 1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலகக் சாம்பியன்ஷிப் வெற்றிகளில் அங்கமாக இருந்துள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் பெற்ற அந்த 2 வெற்றிகள் 24 கேரட் தங்கத்தை போன்றது” என்று கூறினார்.