இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக யார் செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை.
அப்போது கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் பிரம்மாண்ட சாதனை வெற்றிக்கு வித்திட்டார். அப்படிப்பட்ட அவர் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அடிக்கடி காயத்தை சந்திப்பது வழக்கமாகி வருகிறது.
பும்ராவை முடிச்சுறாதீங்க:
எனவே அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டால் காயமடையும் சூழ்நிலைகளை அதிகமாகும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். அதையும் தாண்டி கேப்டனாக நியமித்து அவருடைய கேரியரை முடித்து விடாதீர்கள் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.
எனவே சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் ஜஸ்ப்ரித் பும்ரா தான் கேப்டனாக செயல்பட வேண்டிய ஆப்சனாகும். ஆனால் அவர் கேப்டனாக இருப்பதை நான் விரும்பவில்லை”
சாஸ்திரி எச்சரிக்கை:
“ஏனெனில் பும்ராவை கேப்டனாக நியமித்தால் அவரை ஒரு பவுலராக நீங்கள் இழந்து விடுவீர்கள். அவர் தனது உடலை ஒரு சமயத்தில் ஒரு போட்டிக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது மிகவும் மோசமான காயத்திலிருந்து அவர் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 ஓவர்கள் வீச வேண்டும்”
இதையும் படிங்க: ஃபினிஷர் டூ கேப்டன்.. வான்கடே எக்ஸ்ட்ராவாக ஜொலிக்கிறது.. ரோஹித்தை பாராட்டிய சூரியகுமார்
“அவ்வாறு வீசும் போது கேப்டன்ஷிப் அழுத்தம் அவருடைய மனதில் பாதிப்பை உண்டாக்கும். எனவே நீங்கள் சுப்மன் கில் போன்றவரை வளர்க்கலாம். 25, 26 வயதைக் கொண்டுள்ள அவருக்கு வாய்ப்புகளையும் நேரத்தையும் வழங்குங்கள். ரிஷப் பண்ட்டும் அதை செய்வதற்கு சரியானவர். இந்த இருவருமே கேப்டனாக செயல்படத் தகுதியானவர்கள். ஏனெனில் அவர்களிடம் வயதும் தசாப்த வருங்காலமும் உள்ளது. அவர்கள் கற்றுக் கொள்வார்கள். ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டுள்ளதால் அவர்களிடம் ஓரளவு நல்ல அனுபவம் உள்ளது” என்று கூறியுள்ளனர்.



