இந்தியாவின் மும்பையில் உள்ள உலகப் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மே 16ஆம் தேதி ரோஹித் சர்மா ஸ்டேண்ட் திறக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ரோஹித் சர்மா மும்பைக்காக உள்ளூரில் விளையாடி 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை அவர் இந்தியா வெல்வதற்கு உதவினார்.
ஆரம்பக் காலங்களில் லோயர் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் நாளடைவில் தோனியின் முடிவால் துவக்க வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ரோகித் சர்மா 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தார். அந்த வகையில் மேட்ச் வின்னராக உருவெடுத்த அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை கேப்டனாக வென்றார்.
சூரியகுமார் பாராட்டு:
அதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்தார். அந்த வகையில் தங்கள் மாநிலத்திலிருந்து சென்று நாட்டுக்காக பெருமை சேர்த்த ரோஹித் சர்மாவின் பெயரை மும்பை வாரியம் வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டேண்ட்டுக்கு சூட்டி கௌரவித்துள்ளது. அந்த விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ரோகித் சர்மா பெற்றோர்கள் மற்றும் மும்பை வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனால் சச்சின், கவாஸ்கர், அஜித் வடேகர், திலிப் வெங்சர்க்கார் ஆகியோருக்கு அடுத்து வான்கடே மைதானத்தில் பெயரைக் கொண்ட வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் பெயரை பெற்றதன் காரணமாக வான்கடே மைதானம் எக்ஸ்ட்ரா புகழுடன் ஜொலிப்பதாக சூரியகுமார் யாதவ் பாராட்டியுள்ளார்.
வான்கடேவில் கெளரவம்:
இது பற்றி ட்விட்டரில் ரோஹித் சர்மா ஸ்டேண்ட்க்கு முன்னே அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சூரியகுமார் தெரிவித்தது பின்வருமாறு. “கிரிக்கெட் களத்தில் அற்புதமான விஷயங்களை சாதித்துள்ளதற்காக வாழ்த்துக்கள் ரோஹித் சர்மா. ஃபினிஷராக கேரியரை துவங்கி துவக்க வீரராக மாறி எங்களுடைய கேப்டனாக முன்னேறியது முதல் நீங்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் உத்வேகமாகவும் எங்களுடைய பெருமையாகவும் இருந்தீர்கள்”
இதையும் படிங்க: மீண்டும் துவங்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டிக்கே வந்துள்ள சிக்கல் – போட்டி முழுசா நடக்குமா?
“அணியை முன்னின்று வழிநடத்தி போட்டியை சிறப்பாக மாற்றக்கூடிய தலைவர் அரிதாகவே வருவார். நீங்கள் அது போன்ற தலைவர். நீங்கள் விளையாட்டை மட்டும் மாற்றியவர் அல்ல. அணுகுமுறை, உடைமாற்றும் அறையின் சூழல் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றி கேப்டனின் பங்கை மறுவறை செய்த தலைவர். ஏற்கனவே நான் சொல்வது போல நல்ல விஷயங்கள் நல்ல நபர்களுக்கு நடக்கும். நீங்கள் இதற்குத் தகுதியானவர்கள். தற்போது வான்கடே கூடுதல் சிறந்த சின்னமாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.



