ஐபிஎல் 2022 : இந்த வருடம் புதிய சாம்பியன் கன்பார்ம் ! கோப்பையை வாங்கப்போவது அவர்கள்தான் – ஜாம்பவானின் கணிப்பு

Ravi Shastri Sunil Gavaskar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 3-வது வரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய இந்த தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு 10 அணிகள் மோதி வருகின்றன. இதில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL 2022 (2)

பொதுவாகவே எதிர்பாராத திருப்பங்களை கொடுக்கும் ஒரு கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடர் இந்த வருடமும் பல விறுவிறுப்பான திரில்லர் தருணங்களை கொடுத்து வருகிறது. இதில் இதுவரை ஒரு கோப்பைகளை கூட வெல்லாத பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் வெற்றிநடை போடுகின்றன.

- Advertisement -

திணறும் மும்பை – சென்னை:
சொல்லப்போனால் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத், லக்னோ ஆகிய அணிகள் கூட தொடர் வெற்றிகளால் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் ஜொலிக்கின்றன. ஆனால் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

MI vs CSK

இதில் 4 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியன் என்ற பெயருடன் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கூட 4 தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என சாதனை படைத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக தனது 6 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் அதலபாதாளத்தில் திண்டாடுகிறது.

- Advertisement -

புதிய சாம்பியன்:
இந்த வருடம் 10 அணிகள் விளையாடுவதால் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி முன்பைவிட மிகவும் கடுமையாகியுள்ளது. அதன் காரணமாக 6 தோல்விகளை பதிவு செய்த மும்பை அடுத்த 8 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் 4 தோல்விகளுடன் தவிக்கும் சென்னையும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. அதே சமயம் குஜராத், லக்னோ போன்ற புதிய அணிகளும் பெங்களூரு, பஞ்சாப் போன்ற இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகள் தொடர் வெற்றிகளால் புள்ளிபட்டியலில் டாப் இடங்களை பிடித்துள்ளதை பார்க்கும்போது இந்த வருடம் இதுவரை கோப்பையை வெல்லாத ஏதோ ஒரு அணி தான் முதல் முறையாக கோப்பையை வென்று புதிய சாம்பியனாக சாதனை படைக்கப் போகிறது என பலரும் கணித்து வருகின்றனர்.

Shastri

அந்த வகையில் கடந்த பல வருடங்களாக கோப்பைக்காக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த வருடம் நிச்சயமாக புதிய சாம்பியனாக கோப்பையை வெல்லும் என முன்னாள் இந்திய ஜம்பவான் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சீசனில் புதிய சாம்பியன் வரப்போகிறது என உறுதியாக நான் நம்புகிறேன். அதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு கண்டிப்பாக தகுதி பெறும். ஏனெனில் வெற்றியுடன் தொடங்கியுள்ள அவர்கள் இந்த தொடரின் ஒவ்வொரு போட்டி நடைபெற நடைபெற முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறார்கள்” என கூறினார்.

சுதந்திர பறவை விராட்:
கடந்த 2013 – 2021 வரை பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்து கோப்பையை வெல்ல கேப்டனாக முழுமூச்சுடன் போராடிய நட்சத்திரம் விராட் கோலி அதில் கடைசி வரை தோல்வியடைந்து விமர்சனத்திற்கு உள்ளாகி கடந்த வருடம் பெங்களூர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் தற்போது இந்தியாவின் கேப்டன் பதவியையும் பணிச்சுமை காரணமாக ஒதுக்கியுள்ள அவர் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் சுதந்திர பறவையாக விளையாட தொடங்கியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

RCB vs PBKS Extras

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். அதேபோல் கிளன் மேக்ஸ்வெல் எந்த அளவுக்கு அதிரடி காட்டுவார் என்பது நமக்கு தெரியும். சுழல் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கும் திறமை பெற்ற அவர் பெங்களூர் அணியின் துருப்பு சீட்டாக உருவெடுப்பார். அத்துடன் கேப்டனாக டுப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு மிகப்பெரிய போனசாக அமைந்துள்ளார்” என கூறினார்.

Advertisement