இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 3 ஒருநாள் தொடரின் முதல் போட்டிகளில் வென்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற நியூஸிலாந்து தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை 47.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நியூஸிலாந்து எளிதாக தொட்டு வெற்றி பெற்றது.
அந்தத் தோல்விக்கு இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் சொதப்பலாக பந்து வீசியது முக்கிய காரணமானது. குறிப்பாக ப்ரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது தோல்விக்கு வித்திட்டது. சொல்லப்போனால் இதுவரை விளையாடிய போட்டிகளில் அவர்கள் எப்போதுமே நிலையாக தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகளில் பங்காற்றியதில்லை.
என்னைப் போல அர்ஷ்தீப்:
எப்போதாவது ஓரிரு போட்டிகளில் அசத்துவதை வைத்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவர்களை போன்ற சுமாரான பவுலர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். மறுபுறம் கிடைத்த வாய்ப்புகளில் நிலையாக அசத்தியுள்ள அர்ஷ்தீப் சிங்கிற்கு நிலையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் 2024இல் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருந்த தம்மை பெஞ்சில் அமர வைத்தது போல அர்ஷ்தீப் சிங்கை கெடுக்காமல் 3வது போட்டியில் வாய்ப்பளிக்குமாறு கௌதம் கம்பீரை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி பவுலர்களுக்கு இடையே இருக்கிறது. 2027 உலகக் கோப்பை நடைபெறும் தென்னாப்பிரிக்காவில் தரையில் அடிக்கக்கூடிய பவுலர் உங்களுக்கு தேவை. அங்கே விளையாடுவதற்கு முன் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு அனுபவம் தேவை என்று நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”
அஸ்வின் விளாசல்:
“ஆனால் யாருமே அர்ஷ்தீப் சிங் என்ன சிந்திப்பார் என்பதை சிந்திக்கவில்லை. இவை அனைத்தும் அவர் எவ்வளவு விளையாடியுள்ளார் விளையாடவில்லை என்பதைப் பற்றியதல்ல. தற்சமயத்தில் அவர் என்ன சிந்திப்பார்? என்பது முக்கியமாகும். ஏனெனில் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக விளையாடியும் அவர் தன்னுடைய இடத்துக்காக இன்னும் சண்டையிட வேண்டியுள்ளது”
இதையும் படிங்க: இந்தியாவை சீண்டி ஐபிஎல்லை தடை செய்த வங்கதேசம்.. வீரர்கள் போராட்டத்தால் பிபிஎல் ரத்தான சோகம்
“அதனால் அடுத்த முறை விளையாடும் போது அவர் தடுமாற வாய்ப்புள்ளது. நீங்கள் என்ன சொன்னாலும் கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டாகும். பவுலர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? பேட்ஸ்மேன்களுக்கு நடப்பதில்லை? அர்ஷ்தீப் நிலைமையில் நானும் இருந்துள்ளேன். அதனாலேயே அவருக்காக நான் வாதிடுகிறேன். பந்தை கையில் கொடுக்கும் போதெல்லாம் அவர் உங்களுக்காக அசத்தியுள்ளார். எனவே தகுதியான அவரை பிளேயிங் லெவனில் தலையை நிமிர்த்து விளையாட அனுமதியுங்கள் பாஸ்” என்று கூறியுள்ளார்.



