ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை வரும் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அத்தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதிக்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தினார்.
அதற்கு பதிலடியாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடக்கூடாது என்று இங்குள்ள சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பிசிசிஐ அறிவுறுத்தலின் படி 9.20 கோடிக்கு வாங்கிய ரஹ்மானை கொல்கத்தா அணி விடுவித்தது. அதற்கு பதிலடியாகவே இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் ஐபிஎல் தொடரை தங்களது நாட்டில் ஒளிபரப்பவும் தடை விதித்தது.
சீண்டிய வங்கதேசம்:
இதற்கிடையே வங்கதேசத்தின் போட்டிகளை இலங்கையில் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக ஐசிசி கருதுகிறது. எனவே ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது புள்ளிகளை இழக்கத் தயாராகுங்கள் என்று வங்கதேசத்திற்கு ஐசிசி பதிலளித்துள்ளது. அதற்கு 2027 வரை வங்கதேசத்துக்கு நிதி வழங்கும் ஒப்பந்தத்தில் ஐசிசி 2022லேயே கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு வாரியத்தின் இயக்குனர் நஜ்முல் இஸ்லாம் தெரிவித்தார்.
எனவே இந்தியாவுக்கு அடிபணியாமல் 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து மொத்தமாக வெளியேறினாலும் வங்கதேசத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் கூறினார். அதே சமயம் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடாவிட்டால் வங்கதேச வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்றும் நஸ்முல் தெரிவித்தார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் பல வருடங்களாகியும் ஐசிசி உலகக் கோப்பை போன்ற பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுக்கத் தவறிய வங்கதேச வீரர்கள் சம்பளத்தை பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.
ரத்தான பிபிஎல்:
எனவே 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகினால் வங்கதேச வாரியத்தின் சார்பில் வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என்றும் அவர் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது. அதன் எதிரொலியாக வங்கதேசத்தில் ஜனவரி 15ஆம் தேதி 2026 வங்கதேச பிரீமியர் லீக் தொடர் வாங்கியது. அத்தொடரில் முதல் நாளில் நடைபெற்ற 2 போட்டிகளையும் புறக்கணித்த வங்கதேச வீரர்கள் தங்களைப் பற்றி குறைவாக பேசிய நஜ்முல் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.
இதையும் படிங்க: ஈஸியா வெற்றியை விட்டுக்கொடுத்த இந்தியா.. 3வது ஒன்டேவில் சோதனை செய்யக்கூடாது.. கம்பீருக்கு கவாஸ்கர் அட்வைஸ்
அவர்களை சமாதானப்படுத்த வங்கதேச வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் 2026 பிபிஎல் தொடரை தற்காலிகமாக ரத்து செய்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் நஜ்முலை இயக்குனர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. தற்போது அவர் மன்னிப்பு கேட்கும் வரை வங்கதேசத்தில் எந்த போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று அந்நாட்டு வீரர்கள் அறிவித்துள்ளனர்.



